Life starts at 40! நாற்பதுகளில் தொடங்குகிறது வாழ்க்கை!

மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
Life starts at 40
Life starts at 40

‘Life starts at 40…’ என்று ஓர் உற்சாகப் பதம் இருக்கிறது! இன்றைய பிறந்தநாள் சரியாக முப்பத்து எட்டு வருடங்கள் உருண்டாடிவிட்டதை நினைவுப்படுத்துகிறது. மேற்சொன்ன வாசகத்தின் படி லைஃப் தொடங்குவதற்குக் கூட இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்ற கூடுதல் உற்சாகத்தோடு இந்தப் பிறந்த நாளையும் தொடங்குகிறேன்!

இளமையின் துடிதுடிப்பும் தனி மனிதருக்குள் இருக்கும் குழந்தைமையும் குறைய வாய்ப்பிருக்கும் தருவாயில், அவற்றை இழந்துவிடாமல் நாற்பதுகளுக்குள் நுழைபவர்களுக்குக் குதூகலத்தைத் தரும் வாசகம் அது! அடுத்தக் கடத்திற்கு நகர்வதற்கான ஊக்கச் சொற்றொடர் அது!

பலருக்கும் தெரியாமல் வெகு சில நெருங்கியவர்களிடத்தில் மட்டுமே வெளிக்காட்டக்கூடிய குழந்தைத்தன்மை ஒவ்வொரு தனி மனிதரிடமும் குடிகொண்டிருக்கும். ஆண்டுகள் பல நகர்ந்தாலும், அந்தக் குழந்தைத்தனத்தை எள்ளளவும் குறையாமல் பார்த்துக்கொண்டால் துன்பத்துக்கு இடையில் கிடைக்கும் இன்பத்தையும் சலிக்காமல் நம்மால் தொடர்ந்து ரசித்துக்கொண்டே இருக்க முடியும்!

அந்தக் குழந்தைத்தனத்தை இழக்கும் போது, Life may end at any age என்ற பதத்தை நமக்குள் பொருத்திக்கொள்ளலாம்! வயாதாகிவிட்டது என்ற எண்ணம் தோன்றுவதற்கு மூலக்காரணமே நமக்குள் இருக்கும் அக்குழந்தையை அடக்கிவைப்பது தான்! எக்காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் உங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் குழந்தையின் உற்சாகத்தை அடக்கி வைக்காதீர்கள்!

‘Life starts at 40… da… இன்னைக்கு தான் நான் பிறந்திருக்கிறேன்…’ என எனக்கு பிடித்தமான ஆசிரியர்களுள் ஒருவரான மரு.மகாதேவன் அவர்கள் தனது நாற்பதாவது பிறந்தநாளின் போது என்னிடம் சொன்னது! நாற்பதுகளை நெருங்கும் எனக்கு அப்போது அவர் சொன்ன குதூகலமும் தொனியும் இப்போதும் மகிழ்ச்சியையும் துள்ளிக்குதிக்கும் மனநிலையையும் தருகிறது!

குழந்தைகளாய் நாட்களை நகர்த்துவோம்!…

  • மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

Subscribe to Our Youtube Channel