இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி நமது வெற்றியாக கொண்டாடப்படுவது ஏன்?

     -மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
Worldcupfinal
Worldcupfinal

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகக் கிரிக்கெட் பார்க்கிறேன் நான்! 1995 ஆம் ஆண்டு தொற்றிக்கொண்ட பழக்கம் அது! ஐந்தாம் வகுப்பிலிருந்தே பேட் மற்றும் பந்து மீது தீராத காதல்! அந்தக் காதலை நிறைவேற்றும் விதமாக அற்புதமான கிரிக்கெட் நண்பர்கள் எனக்கு அமைந்தார்கள்! அதில் எல்லோருமே எனக்கு சீனியர்கள்!

சிறுவனான எனக்கு அவர்கள் கொடுத்த ஊக்கமும் அன்பும் உற்சாகமும், ‘Under 13‘ பிரிவில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யும் அளவுக்கு எடுத்துச் சென்றது. கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பில் ஒரு விக்கெட் மட்டும் எடுத்து ரன் எதுவுமே எடுக்காமல் சோபிக்காததால், எனது கனவு சேலம் காந்தி ஸ்டேடியத்தோடு தகர்ந்து போனது!

தொழில்முறை கிரிக்கெட்டுக்கெல்லாம் வாய்ப்பில்லை, கல்வி மட்டுமே குடும்ப சூழலுக்கு உதவும் என்ற நிலவரம் புரிய, எனது பெறும் காதல் கனவு பதிமூன்று வயதில் கைக்கூடாமல் போனது! ஆம் குழந்தை வயது காதல் தான்!

நண்பர்களோடு விளையாடும் தகுதியான போட்டிகளோடு கல்லூரி காலம் வரை கிரிக்கெட் விளையாடாத நாளில்லை! மறுபுறம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பற்றிக்கொண்ட பழக்கம், இப்போது வரை ஒரு பந்து கூட விடாமல் பார்க்கும் அடிக்‌ஷன் தொடர்ந்துகொண்டிருக்கிறது! பள்ளி அல்லது கல்லூரி காலத்தில் விடுமுறை எடுக்கிறேன் என்றால் ‘என்னடா மேட்சா…’ என ஆசிரியர்கள் கேட்கும் அளவுக்கு கிரிக்கெட் பித்தன் நான்!

கிரிக்கெட் விளையாடாத நபர்கள் கிரிக்கெட் மீது கொண்டிருக்கும் காதலுக்கும், கிரிக்கெட்டை உயிராக நேசித்து, அந்த கனவு நிறைவேறாமல் போன வலியோடு கிரிக்கெட் பார்க்கும் ரசிகருக்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது! கிரிக்கெட்டின் அழகு என்ன தெரியுமா? பிறருடைய வெற்றியை நமது வெற்றியாக உயிர்ப்பூட்டும்! குழும வெற்றியை ஊக்கப்படுத்தும்! பொறாமையைத் தூரத் துரத்தும்!… விடா முயற்சியை சொல்லிக்கொடுக்கும்!…

அதுவும் அடி மேல் அடி கிடைத்து வெற்றியின் விளிம்புக்குப் பல முறை சென்று கிடைக்காமல் திரும்பி, இறுதியாக அந்த வெற்றியை ருசிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே! அடடா… நேற்றைய வெற்றி அப்படியானது! நமக்கே கிடைத்த வெற்றி போன்றது!

எனக்கு எதோ இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘Under 13’ போட்டியில் நான் சதம் அடித்தது போன்ற உணர்வு! ஐந்து விக்கெட்களை சாய்த்த ஒரு கனவு! சேலம் Under 13 பிரிவில் அடுத்தக் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக ஒரு மனப்பிறழ்வு! மீண்டும் காந்தி ஸ்டேடியத்திற்குள் பேடைக் கட்டிக்கோண்டு, பேட்டைத் தூக்கிக்கொண்டு நடந்து செல்வதாக ஒரு உற்சாகம்!

நிறைவேறாத காதல் அழகானது! அந்தக் காதலை ஒரு குழு நிறைவேற்றிக் கொடுப்பதைப் பார்ப்பது கவித்துவமானது! பொழுதுபோக்கிற்காக மட்டும் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு அது புரியாது!

வாழ்த்துகள் இந்தியா!… பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த அதே உணர்வு!

 

 

Subscribe to Our Youtube Channel