உற்சாக வரவேற்பைக் கொடுத்த சாம்பல் இருவாச்சியும் குடுமிப் பருந்தும்!

            -மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
hornbill
hornbill

நீண்ட நாட்களாகக் கால்நடை மருத்துவர் பழனி அவர்களின் கானகத்தைக் காண திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். காக்கைக் கூடு செழியன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று வரலாமா என்று கேட்க, சனிக்கிழமை மாலை அங்குச் செல்லும் திட்டம் உறுதியானது. பணிச்சூழல் காரணமாகத் தன்னால் வர இயலாத சூழலைத் தெரிவித்தார் மரு.பழனி அவர்கள்! நான் அங்கு இல்லை என்றாலும், நான் கொடுக்கும் வரவேற்பை விட சிறப்பான வரவேற்பை உங்களுக்கு அங்கு வழங்குவார்கள் என்றார் அவர்!

மாலை நான்கரை மணிக்கு அவரது பகுதிக்குள் நுழைந்தோம்! யார் நம்மை வரவேற்கப் போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் இணைத்துகொண்டனர்!

சாம்பல் இருவாச்சிகள்:

‘இனிமேல் தான் சிறப்பு வரவேற்பு…’ என்று சொல்லும் அளவுக்கு அடுத்த சில நிமிடங்களில் இரண்டு சாம்பல் இருவாச்சிகள் எங்களைப் பார்த்ததும் மரம் விட்டு தூரத்து மரம் நோக்கிப் பறந்தன! ‘We Welcome u…’ என்று சொல்லும் வகையில், இக்கரையிலிருந்து அக்கரைக்கும், அக்கரையிலிருந்து இக்கரைக்கும் பறந்து பறந்து எங்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தன இருவாச்சிகள்!…

hornbill
சாம்பல் இருவாச்சி

‘கொஞ்சம் ஆசுவாசமாக அமருங்கள்…’ என்று சொல்லும் விதத்தில், ஆற்றின் மொட்டைப் பாறை மீது அமர்ந்து எங்களைக் கம்பீரத்துடன் வரவேற்றது குடுமிப் பருந்து! மீன் கொத்திகளும், நீர்க் காகங்களும் பன்னீர் (தண்ணீர்) தெளித்து எங்களை வரவேற்று குளிர்ச்சியூட்டின! வால் காக்கைகளும், துடுப்பு வால் கரிச்சானும் எங்களது வரவில் பெரு மகிழ்ச்சி கொண்டு விருட்டென எங்கள் முன்னே சீறிப் பாயந்தன!…

‘சிறப்பான வரவேற்பு இருக்கும்…’ என்று மரு.பழனி அவர்கள் சொன்னதற்கான அர்த்தம் புரிந்தது! பறவை ஆர்வலர்களுக்கு இதை விட சிறப்பான வரவேற்பை யாராலும் கொடுக்க முடியாது!… பறிக்கக் காத்திருந்த கொய்யாக்களை கொடுத்து வழி அனுப்பினர் அங்கிருந்த நண்பர்கள்!…

சாம்பல் இருவாச்சியைப் பார்த்துப் படம் பிடித்த மகிழ்ச்சியில் மீண்டும் ஒரு முறை மரு.பழனி அவர்களின் கானகத்துக்கு வர வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே திருப்பத்தூர் நோக்கிப் பயணமானோம்!… பறவைகளைப் படம் பிடித்த அனுபவங்கள் தனிப்பதிவாக!

நன்றி மரு.பழனி அவர்கள்!…

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

சவ்வாது மலை

 

Subscribe to Our Youtube Channel