பழமை மிக்க பாபநாசம் அருவிக்குச் செல்லும் வழித்தடம் அது. மக்கள் கூட்டத்திடம் உணவுக்காகக் கையேந்தும் நிலையில் நிறைய சாம்பல் மந்திகள் (Gray Languar) தென்பட்டன! அழகான கருத்த முகம்… சாம்பல் நிற உடல்… அதீத சுறுசுறுப்பு… என அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன அவை.
அவ்வப்போது சாதாரண குரங்குகளிடம் வாழிட மற்றும் உணவியல் போராட்டத்திற்காக அவை அரங்கேற்றிக் கொண்டிருந்த அழகிய நாடகத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்! அங்கு நிறுத்தப்பட்டிருந்த சிற்றுந்துகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தான் அவற்றின் நாடக மேடை! அங்கும் இங்கும் பாய்ந்து ஒரே களேபரம்…
நீண்ட நேரமாக ஒரு சாம்பல் மந்தி மட்டும் தனிமையில் நிலைத்திருந்தது. திடீரென சாலையோரத்தில் சிதறிக்கிடந்த செங்கல் துகள்களை ரசித்து சுவைக்கத் தொடங்கியது அந்தச் சாம்பல் மந்தி. உடலுக்கு ஊட்டம் அளிக்காத வித்தியாசமான பொருட்களை சாப்பிடும் ‘Pica’ வின் வெளிப்பாடா இல்லை, சாம்பல் மந்திகள் செங்கல்களைச் சாப்பிடும் உயிரினங்களா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது!
திரு.கோவை சதாசிவம் ஐயா அவர்களுடன் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்த பின் தொடர்ந்து என் சிந்தனை. மசக்கை நிலையில் காவிக்கல்… மண் போன்ற பொருட்களை நாடுவது ஒரு உணர்வு. ஆனால் அந்த சாம்பல் மந்தி மசக்கையாய் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
கற்களை சாப்பிடும் ‘Lithophagia’ எனும் மெல்லிய மனநலக் கோளாறால் அது பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்!
காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் சாம்பல் மந்திக்கு மனநலக் கோளாறா என்று நீங்கள் கேட்கலாம். மனித இனைத்தோடு நெருங்கி வந்த பிறகு மன நலப் பிரச்சனைகளுக்கா பஞ்சம்!… மேலும் விலங்கினங்கள் காடுகளில் மகிழ்ச்சியாக வாழ்வதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. மனிதனால் காடுகளின் சூழல் சிதைக்கப்பட்ட பிறகு காடுவாழ் உயிரினங்கள் சந்திக்கும் வாழ்வியல் இடர்பாடுகள் மிக மிக அதிகம்!
நீண்ட நாட்களாக அது செங்கல் துகள்களைத் தொடர்ந்து சாப்பிடுகிறதா இல்லை அன்று எதிர்ப்பாராமல் நடந்த ஒரு சம்பவமா என்று தெரியவில்லை!… நீண்ட நாட்களாகத் தொடர்ந்து சாப்பிடுவதாயின் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஏக்கத்தில் பிறந்த மனம் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இல்லை ஊட்டமான உணவு கிடைக்காமல் இரத்த சோகை குறிகுணத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எப்படியோ… இனிமேல் சாம்பல் மந்தி சாப்பிடும் உணவுப் பட்டியலில் செங்கலையும் இணைக்க வேண்டும் போல!… வன விலங்குகளை நேசிப்போம்!…
-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
Leave a Reply