சங்க காலத்தை நினைவுப்படுத்திய திருப்பத்தூர் பாரம்பரிய உணவுத் திருவிழா – 2024

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

சங்க காலத் திருவிழா போன்ற பிரமையை ஏற்படுத்திய திருப்பத்தூர் விதைகள் மற்றும் உணவுத் திருவிழா:

படையப்பா திரைப்படத்தில் இறுதிப் பகுதியில் ஒரு காட்சி இடம்பெறும்… கேமிராவை மேல் ஆங்கிலில் வைத்துக் காட்டும் போது பல நூறு மீட்டர் தூரத்துக்குக் கூட்டம் வரிசைக் கட்டி நிற்கும். அப்படியான சூழல் தான் உணவுத் திருவிழாவில்! மதிய உணவாக வழங்கப்பட்ட பத்து வகையான பாரம்பர்ய உணவுகளைச் சாப்பிடுவதற்காக பெருங்கூட்டம்! ஆரோக்கியத்திற்கான தேடல் மிகப் பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு அது!

நூற்று மூன்று வயது விவசாயி நிகழ்வைத் தொடங்கி வைத்ததே விழாவின் வெற்றி தான்! மேலும் தன்னுடைய நூறு வயது அனுபவங்களை மேடையில் மழலைக் கொஞ்சும் முதுமை மொழியில் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்!

60க்கும் மேற்பட்ட விதைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் சார்ந்த அரங்குகள்! பாரம்பர்ய நெல் ரகங்கள், மூலிகைகள், பலரும் பார்த்திராத காய் வடிவங்கள்… அனைத்தும் இயற்கையே என்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்!… காலையிலிருந்தே கூட்டம் அலைமோதிக்கொண்டே தான் இருந்தது! நேரம் செல்ல செல்ல பெருந்திரள்! ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விழாவைப் பார்வையிட்டு இருப்பார்கள் என்கிறது கணிப்பு! பாரம்பரிய விதைகள், நஞ்சில்லா காய் ரகங்கள், அடிப்படை உணவுப் பொருட்கள், புத்தகங்கள்… என அரங்குகள் இயற்கை வாசம் பரப்பின! மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்க்கும் போது சங்க காலத் திருவிழாவைக் கண்முன் நிறுத்தின!

கருத்துரைக்காக அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களின் உரை அனைத்தும் வெகு சிறப்பு! மாநில திட்டக் குழு உறுப்பினர் சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் உரையை நேரடியாகக் கேட்க சலனமில்லா கூட்டம்! எப்போதும் போல உணவுகள் சார்ந்தும் ஆரோக்கியம் சார்ந்தும் மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை விதைத்துவிட்டார்! உரையை முடித்த பிறகு அவரைச் சூழந்துகொண்டது மக்களின் அன்பு!

இந்த விழாவிற்காக பெரும் உழைப்பைக் கொடுத்த அன்பர்களுக்கு உள்ளத்திலிருந்து பெரும் வாழ்த்துகள்!… திரு.அச்சுதன் அவர்களின் முன்னெடுப்பு வெற்றி விழாவாக முடியும் வரை அவரது உழைப்பு பெரும் உந்துதல்!… மக்கள் நலச் சந்தை திரு.செந்தமிழ் செல்வன் அவர்களின் ஆலோசனை ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தது! திரு.அன்பு மற்றும் திரு.முத்தமிழ் இருவரும் உறக்கத்தையும் உணவையும் மறந்து முப்பொழுதும் விழாவைப் பற்றிய நினைவிலேயே உழைத்துக்கொண்டிருந்தனர்! திரு.விஸ்வநாதன், நல்வழி.திரு.கரிகாலன், திரு,சோமு, திரு.திரு.இமயவரம்பன், திரு.இராதா கிருஷ்ணன், மரு.அன்புச் செல்வன், திரு.லீலா வினோதன் பல இயற்கை விவசாயிகள் என இவ்விழாவிற்காக மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்து இருந்தனர்!…

நண்பர் ஆற்றல் பிரவீன் குமார், திருசெந்தமிழ் செல்வன் அவர்கள், திரு.கோவை பாலா அவர்கள்… முனைவர் பிரபு, திரு.உழுது உண் சுந்தர்… என சிறப்புரை அற்புதம்!…

மொத்தத்தில்… இது உணவுத் திருவிழா மட்டுமல்ல… திருப்பத்தூர் மக்களுக்கான வெற்றித் திருவிழா!…

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

 

 

Subscribe to Our Youtube Channel