புத்தக வாசகர்கள் பேனா மை போன்றவர்கள்!

           -மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

யாரென்று தெரியாத வாசகர்கள், நமது புத்தகங்களை வாங்கிச் செல்லும் போது உண்டாகும் பேரானந்தத்திற்கு அளவே இல்லை! அப்பேரானந்தத்தை இம்முறை நேரடியாக புத்தகத் திருவிழாவின் காக்கைக் கூடு அரங்கத்தில் அதிகளவில் அனுபவிக்க முடிந்தது. நான் எழுதிய நூல்களைத் தேடி வரும் வாசகர்களுக்கு அறிமுகம் இல்லதவனாய் அரங்கத்தில் அமர்ந்திருந்தது வித்தியாசமானதொரு உணர்வு!

தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தை வழங்குவது வாசகர்களே! புத்தகங்களைப் படித்து முடித்த பிறகு அலைபேசியிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் கருத்துகள் சோர்வைப் போக்கி, தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத் தொகுப்புகளைப் பரிசளிக்கும்! நேரடி வாசகர்கள் கொடுக்கும் ஊக்கப் பரிசுக்கு எவ்வித விருதுகளும் ஈடாகாது!… பத்திரிகைகளில் கட்டுரைகளாக வெளிவரும் போதே வாசகர்களின் பின்னூட்டம், எழுதுவதற்கான பேனா மை போன்றது!

நமது நூல்களைப் பற்றி தாராளமாகப் பிரச்சாரம் செய்யலாம்! ‘புத்தகத்தில் என்ன இருக்கிறது… எதைப் பற்றி பேசுகிறது…’ என்ற ரீதியில் எழுதுவது நூல்களுக்கான அறிமுகத்தை மக்களிடம் ஏற்படுத்தும்! ஆனால் எனது எழுத்துகளைப் பற்றி கடந்த ஒன்பது வருடங்களில் ஒரு போதும் சிறப்பித்துப் பேசியதில்லை, சிறப்பித்துப் பேசவோ எழுதவோ யாரையும் தூண்டியதில்லை! அணிந்துரைக்காக கட்டுரைகளை வழங்கியதோடு சரி!

‘என்னுடைய எழுத்துகள் மக்களுக்குப் பிடித்திருப்பின் அவர்களாகவே அதைக் கொண்டு சேர்க்கட்டும்… எவ்வித வெளி காரணங்களுமின்றி நூல்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கட்டும்…’ என்ற காலத்திற்காக காத்திருந்தேன்! நிறைய நூல் விமர்சனக் கட்டுரைகளும், அறிமுக உரைகளும் இப்போது அதிகரித்திருக்கின்றன!

நேரடி விற்பனை மட்டுமன்றி, ‘நலக்கண்ணாடி நூல்கள்’ தொடங்கிய பிறகு ஆன்லைன் விற்பனையிலும் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. நூல்களைப் படித்த பிறகு பிறருக்கும் பரிந்துரை செய்வதில் தான் எழுத்துகளின் வெற்றி இருக்கிறது. அதை இந்த ஆண்டு அதிகளவில் உணர் முடிந்தது!…

கடந்த ஒன்பது வருடங்களாக இந்து தமிழ் திசையும், விகடனும், மல்லிகை மகளும் எனது எழுத்துகளை வெகு ஜனங்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகிப்பவை! கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக இந்து தமிழ் திசை மற்றும் விகடன் பிரசுரத்தில் வெளிவந்தது எழுத்துகளுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தன! பிறகு பேசா மொழி பதிப்பகத்தில் வெளியான எனது நான்கு புத்தகங்கள்… நன்செய் பிரசுரத்தில் வெளியான நடைப்பயிற்சி, நல்லெண்ணெய் குறுநூல்கள்… என அழகானதொரு தளம் கிடைத்தது…

காக்கைக் கூடு பதிப்பகம் சார்பாக வெளியான எனது ஆறு நூல்கள் மற்றும் பத்து குறுநூல்கள், பெரும் ஊக்கம்! புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகளில் எனது புத்தகங்கள் கிடைத்தாலும், இருபத்து மூன்று நூல்கள் மற்றும் பன்னிரெண்டு குறுநூல்களை ஒரே இடத்தில் (காக்கைக் கூடு அரங்கத்தில்) பெற்றுக்கொள்ளலாம் என்று செழியன் அவர்கள் வழிவகை செய்ய, எனது நூல்களைப் பெற்றுக்கொள்ளும் வாசகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி!

இன்னும் இரண்டு நாட்களே… புத்தகத் திருவிழாவில் என்னுடைய அனைத்து நூல்களும் கிடைக்கும் அரங்கும் – 598 D காக்கைக் கூடு!… அதன் பிறகு நலக்கண்ணாடி நூல்களைத் (8508602806) தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்!

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

Subscribe to Our Youtube Channel