அநீதிக் கதைகள்: (ஆசிரியர் – அருண்.மோ)
சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி ரக திரைப்படமான ‘பாவக் கதைகள்’ ஏற்படுத்திய தாக்கம் வித்தியாசமானது. கதைகளின் உள்ளீட்டிலிருந்து வெளிவர சில நாட்கள் ஆகின! திரு.அருண்.மோ அவர்கள் படைத்திருக்கும் ’திரட்டு’ ரக கதைகளான ‘ஆநீதிக் கதைகள்’ அதே உணர்வைத் தான் கொடுத்திருக்கின்றன! மனதைப் பிழியும் கதைகள்!…
சாலையில் செல்லும் போது நாய்கள் எதையாவது மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தால், ‘தீட்டு’ கதை மனதில் எட்டிப் பார்க்கிறது. உளவியல் சார்ந்த பூச்சி கதையில் மன ரீதியான விஷயங்கள் ஆழ்மனதை அழுத்துகின்றன. உளச்சிதைவு கதைக்களத்தை நிச்சயம் எதிர்காலத்தில் திரைப்படமாக மாற்றலாம்! கதைகளுக்கு அறிமுகம் கொடுக்க, சூழலை விவரிக்கும் பாங்கு அழகாக இருந்தது! ஒவ்வொரு கதையும் நம்மை கற்பனை உலகத்திற்கு கூட்டிச் செல்ல தவறவில்லை. பல்வேறு கதைகள் நிறைந்த ஆநீதிக் கதைகள் வித்தியாசமான உணர்வை உறுதியாக ஏற்படுத்தும்.
சில விஷயங்களை சமூகத்திற்கு எடுத்து சொல்ல சென்சார் இடையூறாக இருக்கும் என்பது திரைப்படக் கலைஞர்களின் பரவலான கருத்து. அவ்வகையில் சென்சார் எனும் தடையை நீக்கிவிட்டு, கதைக்கு தேவைப்படும் இடங்களில் ஜனரஞ்சக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருகிறார் ஆசிரியர். அவ்வார்த்தைகள் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த நிச்சயம் தேவை என்பது கதைப்பிரியர்களுக்கு நன்கு புரியும்… ‘புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டேன்…’ என்று அருண் அவர்களிடம் சொன்ன போது, ‘டாக்டர்… கதைக்களம் அநீதியானது… கவனம்’ எனும் ரீதியில் குறுந்தகவல் அனுப்பியிருந்தார்… அப்போது அவருக்கு பதில் அளிக்கவில்லை… இப்போது சொல்கிறேன்… ‘அந்த அநீதியான கதைக்களமும் வார்த்தைகளின் உணர்வுகளுமே புத்தகத்தின் அழகு அருண் சார்…’
புத்தகத்தின் அட்டைப் படமே இது ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று அனுமானித்திருந்தேன்… அதை செய்ய அணு அளவும் தவறவில்லை புத்தகம்! ஒவ்வொரு கதையிலும் இழையோடும் இவரது அரசியல் மற்றும் நிகழ்கால நுண்ணிய நையாண்டிகள் ரசிக்க வைக்கின்றன! அனைத்து கதையிலும் உணர்வுகளின் பரிபாஷை மனதை வருடுகின்றன. ’இப்படித் தான் கதை முடியும்’ எனும் எழுத்துக்களை விட, கதையின் முடிவு வாசகர்களையே சிந்திக்கவைக்கும் திறன் படைத்திருந்தால், அது எழுத்துக்களின் வெற்றி. அது அநீதிக் கதைகளின் வெற்றி!… புத்தகத்தைப் பற்றி இன்னும் நிறைய பேசலாம்… நீங்களே முழுவதும் படித்து உணர்வுகளை உள்வாங்கிக்கொள்ளுங்கள்!…
வாழ்த்துகள் அருண்.மோ அவர்களுக்கு… இவ்வளவு நாட்களாக நீங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்திருக்கலாம்… ஆனால் எதிர்காலத்தில் நிறைய படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு புத்தக மற்றும் சினிமாப் பிரியன்…
-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
Leave a Reply