திரைத்துறை மீது தீராக் காதல் கொண்ட அருண்.மோ

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு.அருண்.மோ:

எழுத்தாளர் நீலகண்டன் சார் மூலமாகத் தான் எனக்கு அறிமுகம் இவர். அவர் இவருக்குக் கொடுத்த அறிமுகம் ’நேர்மையான இளைஞர்’ என்பதே! பழகிய பிறகு தெரிந்தது, நீலகண்டன் சாரின் வார்த்தைகளில் தான் எத்தனை உண்மை என!

‘Passion’ சார்ந்து பல்வேறு துறைகளில் இயங்குபவர்களை பார்த்திருப்போம். இவரோ திரைத்துறை மீது வைத்திருக்கும் அந்த Passion அளப்பறியது! அவரின் தீராக் காதலுக்குத் தீனி போடும் வகையில், தான் உருவாக்கிய ‘தமிழ் ஸ்டுடியோ’ அமைப்பு துணை நிற்கிறது. அதில் படிக்கும் படிமை மாணவர்களும், திரைத்துறை மீது விருப்பம் கொண்ட இளைஞர்களும் பக்கபலமாக இருக்க தொடர்ந்து இயங்கும் பேராற்றல் இவர்.

திரைத்துறையைச் சார்ந்த புத்தகங்களுக்கென தனது அலுவலகத்தில் மிகப்பெரிய நூலகத்தை வைத்திருக்கிறார். மன்னிக்கவும் நூலகத்தில் அலுவலகத்தை வைத்திருக்கிறார். நாலாபுறமும் திரை நூல்கள்! அந்தக் காலத்து நூல்கள் முதல் இப்போதைய காலத்து நூல்கள் வரை, இவரது அலமாரிகளிலிருந்து எட்டிப்பார்க்கின்றன. அதுவும் பல்லாயிரக் கணக்கான நூல்கள்! நூலகத்திற்கு கொடுத்திருக்கும் திரைப்படங்கள் சார்ந்த ’இண்டீரியர் டிசைனிங்’ மிகச்சிறப்பு!

’படச்சுருள்’ எனும் மாத இதழ் இவரது இயக்கம் சார்பாக வெளிவருகிறது! திரைப்படக் கட்டுரைகள் மற்றும் நலக்கட்டுரைகளை சுமந்துகொண்டு வருகிறது படச்சுருள்! உதவி இயக்குநர்களை உருவாக்குவது… சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்துவது என அயராமல் இயங்குபவர்!

’சுயாதின திரைப்பட விழா…’ இவரது பெரும் உழைப்பால் வருடா வருடம் நடக்கும் அழகானதொரு நிகழ்வு! இரண்டு முறை ’விகடன் விருதாளர்…’ இவர் என்பது குறிப்பிடத்தக்கது! கருப்பு பதிப்பகம்… பேசாமொழி பதிப்பகம் சார்பில் பல நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வருகிறார்.

பயண ஆர்வலர்… தன்னிடம் பயிலும் மாணவர்களை அழைத்துக்கொண்டு அவ்வபோது ரிலாக்ஸாக பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் இவருக்கு! நாங்கள் இருவரும் பல்வேறு தளங்களுக்குத் தனிதனியே பயணம் மேற்கொண்டிருந்தாலும், விரைவில் இணைந்து ஒரு பயணத்தைத் திட்டமிட வேண்டும்! அந்தப் பயணத்தில் புதுபுது இடங்களை ரசித்துகொண்டே, திரைப்படங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்! போராடி போராடி வெற்றிப் பெறுவது எப்படி என்பதை அவரிடம் மலை உச்சியில் அமர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்!

ஆம், பல இளைஞர்களுக்கான முன்னுதாரணம் திரு.அருண் அவர்கள்! கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் பலத் தடங்கல்களைச் சந்தித்த போதிலும், இயக்கத்தை மீட்டெடுத்து முன்னோக்கிச் செல்லும் சிந்தனையாளர்! கொரோன காலம் என்றல்ல… அனைத்து காலங்களிலும் கடின உழைப்பால் தனித்துவமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ!

திரைப்படங்கள் மீது கொண்ட ஆர்வத்திற்கு இணையாக, இயற்கை மீதும், இயற்கை உணவுகளின் மீதும், பாரம்பரிய மருத்துவத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர். பல்வேறு பணிகளோடு இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் விதை அங்காடியும் சென்னையில் இயங்குகிறது. ஐந்து ரூபாய் டாக்டர் போல, ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் உணவுத் திட்டத்தை திரைத்துறையினருக்காகத் தொடங்கி இருக்கிறார்.

இவருடைய அநீதிக் கதைகள் நூல், பல விருதுகளை வாங்கி இருக்கிறது. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கியமான நூல்! அதில் வரும் தீட்டு சிறுகதை உச்சம்!

நீலகண்டன் சாரும், பயணமும், சித்த மருத்துவமும், எங்களை இணைத்த கருவிகள்! உணவு மொழி… காணாத கானகத்தே… கொரோனா யுத்தத்தில் அஞ்சறைப் பெட்டி போன்ற எனது நூல்கள் இவரின் பதிப்பகங்கள் சார்பாக வெளிவந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

பேசும்போது மென்மை… தெளிவு… திட்டமிடல்… உழைப்பு… விடாமுயற்சி… என இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களின் எண்ணிக்கை சற்றே அதிகம்! அனைவரிலும் மாறுமட்ட ஒரு மனிதர் என்பதை இவரிடம் பழகும்போது உணர்ந்துகொள்ளலாம்.

பிறந்தநாளில் அமுத கானத்தோடு, மகிழ்வாக தொடர்ந்து மாறனாகத் திகழ வேண்டும் என வாழ்த்தும் நண்பன்…

மரு.வி.விக்ரம்குமார்.

Subscribe to Our Youtube Channel