சித்த மருத்துவப் பேராளுமை மரு.கு.சிவராமன் அவர்கள்

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

இருபத்திநான்கு மணிநேரமும் சித்த மருத்துவத்தையே ஆக்சிஜனாக உள்ளிழுத்து, சித்த மருத்துத்தையே கரியமிலவாயுவாக வெளியிடும் அறிய வகை தாவர ஜீவன் இவர். ’மிகச் சிறந்த எழுத்தாளர், வசீகரிக்கும் பேச்சாளர்…’ இந்த அறிமுகத்தைத் தாண்டி அவர் சார்ந்து நிறைய பேச வேண்டியிருக்கிறது! தனது எழுத்துகளின் மூலமே நோயாளரின் பாதி நோயை குணமாக்கி, பிறகு மருத்துவம் பார்க்கும் போது தனது கனிவான பேச்சாலும் சித்த மருந்துகளாலும் மிச்சமீதமிருக்கும் குறிகுணங்களை விரட்டும் சக்தி இவருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது.

உறங்கும் போது கனவில் கூட, தேவதைகளுக்குப் பதிலாக சித்தர்கள் வெண்சிறகு வைத்து சித்த மருத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல இவரை ஊக்கப்படுத்துவார்களோ என்னவோ! ’சித்த மருத்துவம் சார்ந்து இந்த செயலை செய்யலாம் என்றிருக்கிறேன்’ என்ற நமது எண்ண ஓட்டத்தை அவரிடம் வெளிப்படுத்தும் முன்பே, ’உனக்கு வெற்றி நிச்சயம், சித்த மருத்துவ முன்னேற்றத்திற்கு உன் பங்களிப்பைக் கொடு’ என்று ஊக்கப்படுத்தும் இயற்கையான இளநீர் இவர். (நமது செயல்களை மட்டுப்படுத்த முயற்சிக்கும் அந்நிய குளிர்பான சக்திகளுக்கு நடுவில்). மேடைகளில் வீரமாகவும் விவேகமாகவும் பேசினாலும், பிறருக்கு எதாவது பாதிப்பு எனில், உடைந்து போகும் மென்’பொறியாளர்.’ தன்னை சார்ந்து வந்தவர்களை கைவிடாமல், கைகொடுத்து தூக்கிவிடும் அன்பாளர்.

’வாழ்ந்தா இப்படி வாழனும்பா, இவரப் போல வாழனும்பானு’ நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் தவறு! ஒரு கட்டுரைக்காக அல்லது பொதுமேடையில் ஒரு உரையாடலுக்கு தயாராவதற்காக பல மணிநேரம் செலவிட்டு, மெனக்கெட்டு சிலபல தியாகங்களை உங்களால் செய்ய முடியும் என்றால் நீங்கள் அவராக ஆசைப்படலாம். சித்த மருத்துவத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்தும், சிலரின் வசைப்பாடல்களை பொறுத்துக்கொண்டு மனப்பக்குவத்துடன் தொடர்ந்து சித்த மருத்துவத்திற்காக குரல்கொடுக்கும் திண்மை உங்களுக்கு இருந்தால், நீங்கள் அவராக ஆசைப்படலாம். தனிமனிதனாக சித்த மருத்துவத்திற்காக பலரை எதிர்த்து வாதாடும் திறமை இருந்தால் நீங்கள் அவராகலாம்!

அரசியல் செய்வது… பிரிவினை உண்டாக்குவது… இந்த வீண் வேலைகளில் எல்லாம் அவருக்கு விருப்பமில்லை. நிலவேம்புக் குடிநீர் சார்ந்து மிகப்பெரிய விவாதம் நடைப்பெற்ற போது, சித்த மருத்துவத்திற்காக குரல் கொடுத்த வெகுசிலரில் இவர் ’லவுட்-ஸ்பீக்கர்.’ அச்சமயத்தில் தனிமனித தாக்குதலுக்கு உட்பட்டும், சிரித்துக்கொண்டே அடுத்த மேடைத் தேடி சித்த மருத்துவத்திற்காக ’மைக்’ பிடித்த ஆதரவாளர்.

சிறுதானியங்களைப் பற்றி பல இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி. இப்போது அரசின் அங்கீகாரம் கிடைத்திருப்பதற்கு இவர் முக்கிய காரணகர்த்தா!… இவரது வெளிநாட்டு பயணங்களைப் பற்றி எழுதினால் கட்டுரை நீளும்!

முதுகலை சித்த மருத்துவம் படித்துமுடித்தவுடன், என்னை இவரிடம் அறிமுகம் செய்து வைத்த எனது ஆசிரியர்.மரு.மகாதேவன் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அரசு மருத்துவர் ஆவதற்கு முன்பு ஆரோக்கியா சித்த மருத்துவமனையில் அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்களும் விளக்கங்களும் என்னுள் ஆழமாக பதிந்திருக்கின்றன! சித்த மருத்துவம் சார்ந்த அவரது கனவு மெய்ப்பட, தொடர்ந்து பயணிப்பேன்! உங்களுக்கு என்னுடைய கனிவான வேண்டுகோள்… உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!… உங்களது உயிர் நண்மர் மரு.சங்கர் சாருடன் சேர்ந்து உலகம் சுற்றுங்கள்!…

சென்னையிலும் கோவையிலும் இவரது ஆரோக்கியா சித்த மருத்துவமனை செயல்படுகிறது. இவரது அப்பாயிண்ட்மண்ட் கிடைக்காவிட்டாலும், இவரைச் சார்ந்து திறமையாக சித்த மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை நாடினாலும் ‘நலம் 360’ உறுதி!

Subscribe to Our Youtube Channel