வெளிநாட்டு சூழலை எழுத்துக்களின் மூலம் அறிந்துக்கொள்ளும் ஆவலில், கோடை மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த மாலை வேளை ஒன்றில், சமஸ் அவர்களின் லண்டனைப் படிக்கத் தொடங்கி இருந்தேன்! லண்டனைப் பற்றிப் படிக்கும் போது, ஓரளவிற்காவது இதமான சூழல் இருக்க வேண்டுமல்லவா!…
விமான அனுபவத்தில் தொடங்குகிறது… பிரித்தானிய கிராம அனுபவத்தில் முடிகிறது… இடையில் குளிர்ச்சியான ஓர் வெளிநாட்டுப் பயணத்தை சலிப்புத் தட்டாத எழுத்தின் மூலம் தரக்காத்திருக்கிறது லண்டன்!…
பல்வேறு பயணக் கட்டுரைகளையும், பயணத் தொகுப்புகளையும் இதற்கு முன்பு நிறைய வாசித்த அனுபவம் உண்டு! அந்த அனுபவங்களிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது லண்டன்? ஒரு இடத்தை நோக்கிப் பயணப்படும்போது, அங்கிருக்கும் அரசியல், அவ்விடத்தின் வரலாறு, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை… இவற்றை குழைத்து, பயணத்தோடு இழைத்து வாசகர்களைக் கட்டிப்போடுகிறது லண்டன்!
லண்டனின் குளிர்ச்சியைப் பற்றி அவர் பேசும் போது, ஏங்குகிறது மனது லண்டனுக்காக! ’விரலைக் கடிக்கும் குளிர்…’ என்று அவர் தனது அனுபவத்தைப் பதிவு செய்தாலும், அந்த அதிதீவிர குளிருக்காக நடுங்குகின்றன கை விரல்கள்! சூழலுக்குள் சுண்டி இழுக்கும் அவரின் எழுத்துக் கூர்மை அப்படி! ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் போதும், அதற்குள் நம்மையும் கைப்பிடித்து, சில நேரங்களில் தோள் மேல் கைப்போட்டு அழைத்துச் செல்கிறார்!
லண்டனின் சுகாதாரக் கட்டமைப்பையும் கல்வியின் தரத்தையும் அவரின் எழுத்துக்களின் மூலம் உணரும் போது பேராச்சரியமே மேலோங்குகிறது!… ’இந்த நூல்… நமது நாட்டுக்கான சுயத்தம்பட்டம் அல்ல… நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களைத் தான் அதிகமாக எழுதப்போகிறேன்…’ என நூலைத் தொடங்கும் போதே தனது எண்ணத்தை பிரதி மாறாமல் நமக்குள் ஆழமாக கடத்திவிடுகிறார்! அதுவும் நம்முள் பசைப் போல ஒட்டிக்கொள்கிறது! மரங்களுக்காக பிரிட்டிஷ்காரர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்ளும் போது, லண்டன் மேயர் வகையாறக்களை கட்டியணைத்துக்கொள்ள வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது!
பயணக் கட்டுரைகளின் மூலம் அரசியல் விழுமியங்களையும், தொலைநோக்குப் படிப்பினைகளையும் வித்தியாசமாக லண்டனில் எழுத்தாட்சி நடத்தியிருக்கிறார் ஆசிரியர் சமஸ்! சமஸ் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உபசரித்த நண்பர்களோடு உரையாடிய விஷயங்களை அப்படியே பயணத்தோடு ஆங்காங்கே தொகுத்தது சிறப்பு! பிரிட்டிஷ் கிராமங்களைப் பார்ப்பதற்கான இவரது ஏக்கம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது!
லண்டன்… அழகான… புராதான… வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் என நாம் அறிந்து வைத்திருப்போம்!… ஆனால் அதற்கு பின் இருக்கும் உழைப்பையும், வலியையும் பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர்! தேம்ஸ் நதியின் வீழ்ச்சி… பின் அதன் மலர்ச்சி… நமக்கான முக்கியமான பாடம்! நீர்நிலைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அவர்கள் கொடுக்கத் துவங்கியிருக்கும் முக்கியத்துவதிற்கு பின்னர் மிகப்பெரிய சிந்தனைகளும், தொலைநோக்குப் பார்வையும் இருக்கிறது என்பதை லண்டன் நமக்குத் தெரியப்படுத்துகிறது.
பாதிப்பிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எப்படி மீண்டெழுவது எனும் பாடத்தை லண்டன் நமக்கு கற்றுத் தருவதாகவே உணர்கிறேன்! நம் நாட்டில்… சுற்றுச்சூழல் சார்ந்து பாதிப்புகள் பெருமளவில் தலைக்காட்டத் தொடங்கியிருக்கும் சூழலில், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா என்றால், நிச்சயம் இல்லை என்பதே உண்மை!… லண்டன் அதற்கான சிறுநகர்வையாவது விதைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது! ஒவ்வொரு புத்தகமுமே ஏதாவதொரு தாக்கத்தை வாசகர்களுக்குள் ஏற்படுத்துவது இயல்பு! அவ்வகையில் லண்டன் பல படிப்பினைகளை கற்றுக்கொடுக்க புத்தக வாசனையோடு காத்திருக்கிறது!…
நடப்பதை… மிதிவண்டி பயன்படுத்தும் வழக்கம் சார்ந்த பக்கங்களைப் படிக்கும் போது, லண்டன் நகரில் நடக்கவும், மிதிவண்டியின் பெடல்களை அழுத்தி மிதிக்கவும் கால்கள் பரபரக்கின்றன! ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகத்தின் பழமை… வாழ்வூதிய உறுதி… சூழல் அக்கறை… மருத்துவக் கட்டமைப்பு…. அரசின் கல்வி… இவை அனைத்தையும் அழகாக தனது பக்கங்களின் மூலம் கண் முன்னே நிறுத்துகிறது லண்டன்!
அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்களின் நிலை… உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை… நூலின் கடையில் வரும் உரையாடல்கள்… அனைத்துமே நூலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் வலிமை சேர்க்கின்றன! லண்டனைப் பற்றிப் பேசினால், பக்கங்கள் நகர்ந்துக்கொண்டே தான் இருக்கும்!… நீங்களே லண்டனைப் படித்து அனுபவங்களை உள்வாங்கிக்கொள்ளுங்கள்!…
வெளுத்த மழை குறைந்து, குளிர்ச்சியை மட்டும் சாளரத்தின் வழியே அறைக்குள் அனுப்பிக்கொண்டிருக்கிறது! புத்தகத்தின் பக்கங்கள் கொடுத்த குளிர்ச்சிக்கு ஈடாக வெளிசூழலும் குளிர்ச்சியை விரவ விட்டுக்கொண்டிருக்கிறது!
வித்தியாசமான பயண நூல் லண்டன்!
ஏற்கனவே சமஸ் அவர்களின் எழுத்துக்கள் மிகப்பெரும் அறிமுகம்! திருப்பத்தூர் இலக்கியத் திருவிழாவில் சந்தித்து ஓய்வு நேரத்தில் அவரது அனுபவங்களை உள்வாங்கியது, எனக்கான எதிர்கால அனுபவம்!
-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
Leave a Reply