சவ்வாது மலையில் ஒரு இயற்கை சந்திப்பு

மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

48 மணி நேரங்களைத் தாங்கிய இரண்டு நாட்களும் இடைவிடாமல் பறவைகள்… விலங்குகள்… சுற்றுச்சூழல் குறித்துப் பேசிக்கொண்டே இருந்தால் இயந்திர வாழ்க்கை குறித்த நினைவு வர வாய்ப்பிருக்கிறதா! நிச்சயம் இல்லை… அப்படி ஒரு அழகான சூழலைத் தான் சவ்வாது மலை பறவையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தியிருந்தது. அதாவது பறவைகள் குறித்த தேடல் இடைவிடாமல் இருந்துக்கொண்டே இருந்தது. வெளியே பறவைகளின் குரல்கள் எதிரொலிக்க, உள்ளே பறவைகள் குறித்த உரையாடல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. வெளியே பறவைகளின் குரல்… உள்ளே பறவை ஆர்வலர்களின் குரல்!… அவ்வளவே வித்தியாசம்!

கோடை காலத்திற்கேற்ற சூழலுடன் அதிகம் குளிர் இல்லாமல் சாந்தமாக இருந்தது சவ்வாது மலையின் மலை ரெட்டியூர் பகுதி! நிகழ்விற்கு முதல்நாளே பல பறவை ஆர்வலர்கள் வந்துவிட, நிகழ்வு களைக்கட்டியது! கோவை, சென்னை, தேனி என வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பறவை ஆர்வலர்கள் உற்சாகமூட்டினர்! தங்கி இருந்த நான்கு திசைகளிலும் மரங்கள் சூழ்ந்திருக்க, பறவைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது!

உயிர் இதழாசிரியர், இயற்கை ஆர்வலர் திரு.சண்முகானந்தம் அவர்களுடன் செலவிட்ட நேரம் மதிப்புமிக்கவை! ’பறவைகள் ஏன் முக்கியம்… பறவைகளைப் பார்த்து புகைப்படம் எடுத்தால் மட்டும் நமது பணி முடிந்துவிடுகிறதா… சூழல் மீதான அக்கறை பறவைப் பார்த்தலில் எப்போது வெளிப்படுகிறது…’ என பல்வேறு விஷயங்கள் அவரது அனுபவத் திரையிலிருந்து சிறகடித்தன!

அவரது காடு சார்ந்த அனுபவங்களை திண்ணையில் அமர்ந்து ரசித்துக்கேட்டுக்கொண்டிருந்தேன் நான்!… அந்த திண்ணைப் பேச்சில், யானைகள் துரத்திய அனுபவம், புலிகளையும் சிறுத்தைகளையும் பார்த்த அனுபவம்… திகிலான பயண அனுபவங்கள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டிருந்தார் அவர். ’பேய் காத்த காட்டு உச்சியில இருந்து ரசிச்சிருக்கீங்களா…’ என அவர் கேட்ட போது காடுகளின் மீது அவர் வைத்திருக்கும் நேசம் புரிந்தது! விரைவில் அவரோடு காட்டுப் பயணம் ஒன்று செல்ல வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்தாகிவிட்டது! நிறைய விஷயங்களையும் தன்னுடைய அனுபவங்களையும் சமரசமின்றி பகிர்ந்துக்கொண்டார் அவர்!… அந்த மென்மையான மனிதருக்குள் தான் எவ்வளவு கரடுமுரடான காடு சார்ந்த அனுபவங்கள்!

மாலை வேளையில் பறவைகளைத் தேடி சென்ற பறவை உலா, பல புதிய பறவை நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தது! குளத்தில் இருந்த பறவைகளும்… குளத்து மேட்டிலிருந்த மரங்களில் ஓய்வெடுத்த பறவைகளும்… புதர்களுக்குள் மறைந்திருந்த பறவைகளும், பறவை ஆர்வலர்களை சந்திக்க ஆர்வமாக இருந்தன! நிறைய ஒளிபடக்கருவிகள் படம்பிடிக்க ஆசை தீர காட்சிக்கொடுத்தன பறவைகள்!

பறவை உலாவில் ஒவ்வொருவரும் தங்கள் பறவை அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ள, அதை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தன பறவைகள்! நிறைய பறவைகளைப் பற்றியும் அதன் வாழிடங்களைப் பற்றியும் பேசினோம்! அப்பகுதியில் நடந்துக்கொண்டிருந்த ஊர் மக்களிடமும் பறவைகள் குறித்து பேசிக்கொண்டிருந்த பல பறவை ஆர்வலர்களைப் பார்க்க முடிந்தது!

சூரியன் மறைவதை காட்டுப் பகுதியின் பாறை ஒன்றிலிருந்து ரசித்தனர் பலர்! பொழுது சாய்ந்த பொழுது கூடு திரும்பிய பறவைகளையும் பலர் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். மாலை மங்கத் தொடங்கிய பிறகு இருப்பிடத்திற்கு திரும்பினோம்! சுக்கும் கற்பூரவள்ளியும் மாவிலைகளும் சேர்ந்து தயாரிக்கப்பட்ட மூலிகைத் தேநீரைப் பருகிய பிறகு மாலை இதமானது!

இரவாடிகளை தரிசிக்கலாம் என்ற எண்ணத்தில் இரவு நேரத்தில் பறவைகளைத் தேடிய பயணமும் இருந்தது! ஆனால் இரவாடிகள் அவ்வளவாக காட்சிக்கொடுக்கவில்லை எங்களுக்கு!… நண்பரும் நானும் கும்மிருட்டில் இரவாடியின் ஒலி கேட்ட அடர்ந்த மரம் பார்த்து நீண்ட நேரம் நின்றிருந்தோம்! ஆனால் தரிசனம் கிடைக்கவில்லை. வலசை வாழ்வியல் பள்ளியில் ஒரு மண் வீட்டில் இரவு ஓய்வெடுத்துவிட்டு, அதிகாலை நேரத்தில் அனைவரும் பறவைகளைப் பார்ப்பதற்கு தயாரானோம். சுமார் 5 மணி அளவில் இருந்தே பறவைகள் குரல்கொடுத்து அனைவரையும் தயார்படுத்திவிட்டன என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

பல குழுக்களாக வெவ்வேறு திசை நோக்கிப் பிரிய, ஒவ்வொரு குழுவிற்கும் பறவைகள் ஆங்காங்கே காட்சிக்கொடுத்தன!… ’நாங்க பாத்தோம்… நீங்கப் பாத்தீங்களா…’ என பறவைகள் குறித்த விசாரிப்பு சவ்வாது மலை முழுவதும் எதிரொலித்தது! அதுவரை பார்த்திராத பல பறவைகளைப் பலரால் பார்க்க முடிந்தது! ’அந்தப் பகுதியில் அந்த பறவை இருக்கு… இந்த திசையில் இந்தப் பறவை இருக்கு…’ என காட்டுத்தீப் போல செய்தி பரவ, குழுக்கள் இடம்மாறின!… காட்டுத்தீ எனும் உவமை வேண்டாம்… பறவைகளின் வேகம் போல செய்தி பரவியது என்று வைத்துக்கொள்வோம்! நீர்ப்பறவைகளைத் தேடி குளத்து நடையும் சிறப்பாக இருந்தது! நெல்வயல்கள்… குளக்கரை… ஆலமரங்கள்… மூலிகைத் தாவரங்கள்… பறவைகள்… இதைவிட ஒரு கிராமத்து சூழல் அழகாக அமைவதற்கு வாய்ப்பில்லை!

நீச்சல் தெரிந்தவர்கள் கிணற்றில் குதித்து நீந்த, நீச்சல் தெரியாதவர்களுக்கு வயக்காட்டு பம்பு செட்டு துணை நின்றது! மொத்தத்தில் இயற்கையான குளியல்! நிறைய பறவைகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன!… கிணற்றில் நீந்தியவர்களை வெண்மார்பு மீன் கொத்திகள் கோவமாக பார்த்துக்கொண்டிருந்தன!… தவளைகள் கரையில் தாவிக்கொண்டிருந்தன!… சிறுசிறு மீன்கள் சிதறிக்கொண்டிருந்தன!… கானாங்கோழிகள் தெறித்து ஓடிக்கொண்டிருந்தன! எங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்க குக்குறுவான்கள் இடைவிடாது இசையமைத்துக்கொண்டிருந்தன! துடுப்பு வால் கரிச்சான்கள் காட்டோரத்தில் துடுப்புகளை பறக்கவிட்டன!… இலைப்பறவையும், வானம்பாடியும் சூழலை ரசித்துக்கொண்டிருந்தன!… தங்களைப் பார்க்க வந்திருக்கும் எங்களை நினைத்து நீர்ப்பறவைகள் மகிழ்ச்சியாக நீந்திக்கொண்டிருந்தன!…

பறவை ஆர்வலர்களின் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஐந்து சுட்டிக் குழந்தைகள், பறவைகள் குறித்துப் பேசியதும், பல சந்தேகங்களை எழுப்பியதும் மனநிறைவாக இருந்தது! கிட்டத்தட்ட பத்து பெண் பறவையாளர்கள் தங்களின் பறவைகள் குறித்த அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துகொண்டனர். பறவைகள் உலகத்தில் புதியதாக இணைந்த ஆர்வலர்களும் பல பறவைகளை இரண்டு நாட்களில் இனம் கண்டறிந்து வீடு திரும்பியது சிறப்பு!… பறவைகளைப் புகைப்படம் எடுத்த அனைவரின் புகைப்படங்களின் தரத்திலும் அவ்வளவு நேர்த்தி!…

செல்போன்கள் அவ்வளவாக ஒலிக்கவில்லை அங்கு… வாட்ஸப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்திருந்தது சவ்வாது மலையில் உள்காடு! பலருக்கும் மகிழ்ச்சி… ‘டவர் கிடைக்கலப்பா… இந்த வார்த்தைகள் போதும் இரண்டு நாள் டயல் செய்த மனிதர்களை சமாளிக்க!… மனிதர்களோடுப் பழகி, குடும்பமாக நட்பு பாராட்டும் சூழலை இது போன்ற காடுகளும் பயணங்களுமே ஏற்படுத்தும்! 65 வயது நிரம்பிய திரு.நாசர் அவர்கள் இளமை உத்வேகத்துடன் பறவைகளைப் பார்த்து ரசித்ததோடு, தனது பல பயண அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துக்கொண்டது பலருக்கும் உத்வேகமாக அமைந்தது! டீ-ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்துக்கொண்டு ‘இளமை திரும்புதே…’ என அவரின் செயல்பாடுகள் பலருக்கும் தூண்டுகோலாக அமைந்தன. பயணத்திற்கு வயது தடையல்ல என்பதற்கு அவர் சாட்சி! அதே போல குழந்தைப் பருவத்திலும் பறவைப் பார்ப்பதைத் தொடங்கலாம் என்பதற்கு கலந்துக்கொண்ட சிறுவர்கள் சாட்சி!

இரண்டு நாட்கள் அதிவேகமாக நகர்ந்துவிட, புதுப்பறவைகளும் புது நண்பர்களும் கிடைத்த மகிழ்ச்சியில், அவரவர் ஊர் நோக்கித் திரும்பத்தொடங்கினர் பறவை ஆர்வலர்கள்!…

நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக ஒருங்கிணைத்த காக்கை கூடு திரு.செழியன் அவர்களுக்கு பாராட்டுகளும் அன்புகளும்! வலசை வாழ்வியல் பள்ளியில் இடமளித்த ஆற்றல் பிரவீன்குமாருக்கும் நன்றிகள்! பறவை ஆர்வலர்களோடு என்னுடைய பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டதும் இனிமையான அனுபவம்!…

பறவையாளர்களின் சந்திப்பு!… பல கதைகள் பேசும்!

  • மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

Subscribe to Our Youtube Channel