இயற்கையான குளியல் பொடிகள்

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

”இந்த சோப்பு எனக்கு அலர்ஜி… அந்த சோப்போட வாசனையே எனக்கு ஆகாது… எந்த சோப்பு போட்டாலும் தோல்ல அரிப்பும் தேமலும் குறையவே மாட்டேங்குது…” இப்படி சோப்பு சார்ந்த அங்கலாய்ப்புகளை சமீபமாக அதிகமாக கேள்விப்பட தொடங்கியிருக்கிறோம். வெவ்வேறு சோப்புக் கட்டிகளை மாற்றி மாற்றி பயன்படுத்துபவர்களின் தேகம் பாதிப்படைவதையும் பார்க்கலாம். 

’சோப்புகளைத் தவிர்த்து, குளியலுக்குப் பயன்படுத்த வேறு ஏதேனும் இருக்கிறதா?…’ என விடைதேடும் இயற்கைப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. இருக்கவே இருக்கின்றன மூலிகைக் குளியல் பொடிகள். நம்மிடையே வழக்கத்தில் இருந்த இயற்கையான குளியல் கலவைகள், செலவின்றி உடலுக்கு அழகை வாரி வழங்கிய அற்புதமான பொருட்கள்!

சோப்புகள் பிரபலமாவதற்கு முன்னர், தினமும் நமது மேனியில் தவழ்ந்து, தோல் நோய்கள் வராமல் தடுத்ததோடு, நாள் முழுக்க வாசனையையும் பரிசளித்தது இரசாயனக் கலப்படமில்லா மூலிகைக் கலவைகள் தான்! தினமும் இல்லையென்றாலும் வாரத்தில் சில நாட்களாவது மூலிகைக் கலவைகளை குளியலுக்குப் பயன்படுத்தினால், விரைவில் சோப்புகளின் வாசனையை நாம் மறந்துவிட வாய்ப்புகள் அதிகம். 

நலம் பயக்கும் ’நலங்கு மா’:

மூலிகை கலவைகள் என்றவுடனே அனைவரது முதல் தேர்வும் ‘நலங்குமாவாகத்’ தான் இருக்கும். பொதுவாக நலங்குமா கலவையில், வெட்டிவேர், பாசிப்பயறு, சந்தனம், விலாமிச்சம் வேர், கிச்சிலிக் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி போன்ற மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. மேற்சொன்ன மூலிகைகளை சம அளவு எடுத்து காயவைத்து, பொடி செய்து ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். ‘நலங்குமா’ கலவை என்று கடைகளிலும் கிடைக்கும். பெண்களுக்கான நலங்குமா கலவையில், மேற்சொன்ன மூலிகைகளோடு கஸ்தூரி மஞ்சள் மற்றும் மஞ்சளை சேர்த்து பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற இடங்களில் தோன்றும் ரோம வளர்ச்சி தடுக்கப்படும். நலங்கு மாவினை சோப்புக்கு பதிலாக குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். 

பயன்கள்:

நலங்குமா கலவையில் உள்ள மூலிகைகள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இதனை தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது, தேகத்தில் தங்கிய அழுக்குகள் தூர்வாரப்பட்டு, அடைப்பட்ட துவாரங்கள் திறக்கப்பட்டு, தோலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். நாள் முழுவதும் மூலிகைகளின் வாசனை நம் உடலிலிருந்து வெளிப்படும். 

நலங்குமாவில் உள்ள சில மூலிகைகளுக்கு கிருமிநாசினி செய்கை இருப்பதால், தோலில் உண்டாகும் தேமல், படை, அரிப்பு போன்ற தோல் நோய்கள் ஏற்படாது. மேற்சொன்ன மூலிகைகளில் உள்ள நுண்வேதிப்பொருட்கள் அனைத்தும், தோலுக்கு நலம் பயக்கக்கூடியவை. உடலின் வெப்பத்தைக் குறைத்து, இயற்கையான சுகந்தத்தை பரப்ப வல்லவை. வறண்ட சருமம் உடையவர்கள், நலங்குமா கலவையை தயிர் கலந்து பூசலாம். 

பேஸ்-பேக்:

நலங்குமா கலவையை நுங்கு அல்லது தேன் அல்லது கற்றாழைக் கூழுடன் கலந்து முகத்தில் பூசும் கிரீமாகவும் பயன்படுத்தலாம். பூசிய பின் மென்மையாக மசாஜ் செய்து, அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ, உடனடியாக முகம் பிரகாசம் அடைந்திருப்பதை கண்கூடாகப் பார்க்கமுடியும்.  

மென்மையான தேகத்திற்கு:

ஆவாரம்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, எலுமிச்சைத் தோல், ஆரஞ்சுப் பழத்தோல், அதிமதுரம், ஜாதிக்காய், கிச்சிலிக்கிழங்கு, வெட்டிவேர்… இவற்றை சம அளவு எடுத்து உலர்ந்தி பொடிசெய்து வைத்துக்கொண்டு நீரில் குழைத்து, குளியலுக்குப் பயன்படுத்தலாம். மென்மையான தேகத்தைப் பெற ஆசைப்படுபவர்கள், இந்த கலவையை முயற்சித்துப் பார்க்கலாம். 

சுருக்கங்களைத் தடுக்கும் கலவை:

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலாப் பொடி), ஜாதிக்காய், ஆவாரம்பட்டை, நாவல்கொட்டை, துளசி இலைகள், விலாமிச்சம் வேர்… இவை அனைத்தையும் காயவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்பே தேவையான அளவு நீரில் குழைத்து, முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி, பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு குளிக்கலாம். இளமையான தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். மேற்சொன்ன மூலிகைகளில் பெரும்பாலானவை துவர்ப்புச் சுவை உடையவை. தோலில் உண்டாகும் புண்கள், சிறுசிறு கொப்புளங்களை குணமாக்குவதற்கும் பயன்படும். அடைப்பட்ட துவாரங்களை திறக்கச் செய்து, வியர்வையை முறையாக வெளியேற்ற உதவும். பல்வேறு கிரீம்களால் தேகத்தில் உண்டாகும் சுருக்கங்களை தடுக்க பயன்படுத்தலாம். திரிபலா சூரணத்தை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம். புதினா, கர்ப்பூரவள்ளி, நொச்சி இலைகளையும் நீரில் கலந்து, குளிக்கும் தண்ணீருக்கு மருத்துவ குணம் உண்டாக்கலாம்.  

ஏலம், சோம்பு, வெந்தயம், இலவங்கப்பட்டை, பூவந்திக்கொட்டை, வெட்டிவேர், நன்னாரி வேர், ரோஜா இதழ்கள்… நறுமணமூட்டிகள் அதிகம் சேர்ந்து தயரிக்கப்படும் இந்த வாசனைமிக்க கலவை, வியர்வை நாற்றத்தை தடுக்க உதவும். வாரத்தில் ஒரு நாள் இந்த கலவையை மோரில் கலந்து உடலில் பூசி குளித்து வர, நறுமணம் கமழும். 

பாசிப்பயிரை அடிப்படையாக வைத்து, பல்வேறு கலவைகளில் குளியல் பொடிகளைத் தயாரிக்கலாம். அதாவது ஐம்பது சதவிகித, பாசிப்பயிரு மாவுடன், மற்ற மூலிகைகள் ஐம்பது சதவிகிதம் சேர்த்து உபயோகிக்கலாம். முழுவதுமாக பயத்தமாவினை மட்டும் கூட குளியல் பொடியாக பயன்படுத்தலாம். கடலை மாவினை நீரில் கரைத்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்துவர, தேகம் பொலிவடையும். பேபி சோப்புகளின் வருகைக்கு முன்னர், பயத்தமாவும், கடலை மாவுமே குழந்தைகளுக்கான குளியல் பொடிகளாக வலம் வந்தன. 

குளியல் கலவைகளை நீரில் நன்றாக குழைத்து பயன்படுத்துவது நல்லது. குளியல் பொடிகளை பசைபோல செய்து மூலிகை நார்களில் தடவி தேய்த்து குளிப்பது நல்ல பலன்கொடுக்கும். இதைவிட மிகச்சிறந்த ஸ்கரப்பர் இருக்க வாய்ப்பில்லை. குளியல் பொடிகளின் மூலம் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப் படி, குளியல் கலவைகளை அமைத்துக் கொள்வது நல்லது. 

 

Subscribe to Our Youtube Channel