முன்பின் அறிமுகமில்லாத மருத்துவர்கள், பொறியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், இளம் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் என 25 பேர் கொண்ட குழுவாகிய நாங்கள் மலையேற்றத்தின் மூலம் சேர நாட்டு மலைப் பகுதியான ‘டாப்-ஸ்டேஷனை’ (மூணார் அருகில்) அடைய போடிநாயக்கனூரில் (தேனி மாவட்டம்) ஒன்று கூடினோம். அங்கிருந்து வாகனங்கள் மூலம் பேஸ்-கேம்ப் (Base camp) பகுதியான குரங்கனி மலைப் பகுதிக்கு பயணமானோம். காலை 9 மணிக்கு தொடங்கிய எங்கள் மலையேற்றம் மாலை 4 மணி அளவில் டாப்-ஸ்டேஷனில் முடிவடைந்தது. 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்த மலையேற்றம் புதுமையான அனுபவங்களைக் கொடுத்தது.
மலையேற்றம்:
தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்துகள் அடங்கிய முதுகுப் பைகளுடன் எங்கள் பயணம் உற்சாகமாக தொடங்கியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களின் அடர்வு – குறைவு, சூரியனின் ஒளிச் சிதறல், மரங்களின் நிழல் விழைவு காரணமாக அங்கிருந்த பல்வேறு மலைகள் பல வண்ணங்களில் காட்சி அளித்தன. சிறிது தூரம் மலை ஏறிய பிறகு கீழே குரங்கனி கிராம பகுதியில் இருந்த தென்னை மரங்கள் எங்களுக்கு பச்சைப் புள்ளிகளாய் காட்சி அளித்தன. பின்னர் காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மூங்கில் இல்லத்திலும், அதன் அருகே இருந்த ஆலமரத்தடியிலும் இளைப்பாறினோம். பசுமையும் வறட்சியும் கலந்திருந்த பாதையைத் தாண்டி, உயரமாக அமைந்திருந்த மிகப் பெரிய ஒற்றைப் பாறை தான் எங்களுக்கான ’மதிய உணவு மேசை’.
உணவறுந்தி சிறிது நேர ஓய்விற்கு பின்னர் மலையேற்றம் தொடர்ந்தது. திடீரென அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மலை இடுக்குகளில் மரகதங்கள் தூவியதைப் போல பசும்புல் தரை பிரகாசமாக தென்பட்டது (புல்வெளிக்காடு). ஆங்காங்கே குதிரைகள் பொதி மூட்டைகளுடன் மேலும் கீழும் போக்குவரத்து செய்துகொண்டிருந்தன. அப்பகுதி மலைவாழ் மக்கள் எங்களை விட, மும்மடங்கு வேகமாக மலையேறும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றன. ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதியில் அதிகளவில் ’எலுமிச்சம் புற்கள்’ காணப்பட்டன. மேலும் ’போதைப்புல்’ எனப்படும் ஒரு வகையான புல்லினைத்தையும் அங்கிருந்த முதியவர் இனம் காண்பித்தார். வியர்வை ஒருபுறம் ஆறு போல வழிந்தோட, அயற்சியோடு கூடிய முயற்சியுடன் நாங்கள் தொடர்ந்து மலையேறினோம். அங்கே அவ்வப்போது சிறகடித்த உழவாரக் குருவிகளின் சுறுசுறுப்பும், கொண்டைக் குருவிகளின் சீழக்கை ஒலிகளும் எங்களுக்கு உற்சாகமூட்டின. மிகுந்த களைப்புடன் டாப்-ஸ்டாஷனை அடைந்தோம்.
காத்திருந்த உணவு வகைகள்:
மலையேற்றத்தின் காரணமாக உண்டான நீரிழப்பை ஈடு செய்வதற்காக ’மலைதேன் கலந்த எலுமிச்சை சாறு’ அங்கே கிடைக்கின்றது. பன்னாட்டு குளிர்பானங்கள் அதிகமாக விற்பனைக்கு இருந்தாலும், ‘தேன் – எலுமிச்சை’ சாறுக்கே மவுசு அதிகம். பழ வகைகளில் ’சீமை கத்திரிப்பழம்’ அங்கே வித்தியாசமான துவர்புளிப்பு சுவையோடு ரசிக்க வைக்கிறது. கடுங்காப்பி எனப்படும் கட்டன் – சாயா, கேரளத்து புட்டு – கடலை, ஆப்பம் அனைத்தும் எளிதில் கிடைக்கின்றன.
வகைவகையான முட்டை உணவுகள்:
முட்டைப் பிரியர்களுக்கு காடை முட்டை, ’கிரிராஜா’ எனப்படும் இரட்டை கருவுடைய முட்டை, நாட்டுக்கோழி முட்டை என முட்டை விருந்து காத்திருக்கிறது. காடை முட்டைகளை மூணார் மலை பகுதியிலிருந்து இங்கு கொண்டு வரப்படுவதாக கூறுகிறார்கள். கூடவே ’ஆயிரம் கோழிகளுக்கு அரைக் காடை சமம்’ என்ற கேரள பழமொழியினையும் கூறி காடையின் மருத்துவ குணத்திற்கு அப்பகுதி ’முதுவன்’ இன மக்கள் அத்தாட்சி கொடுக்கின்றனர். இரவு உணவாக அப்பகுதியில் கிடைத்த சிறப்பு உணவுகளை எடுத்துக் கொண்டோம். முன்னிரவில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து விட்டு, பின்னிரவிடம் சரணடைய கூடாரத்தில் உறங்கினோம்.
இதய நோய் தவிர்க்கும் மலையேற்றம்:
நம் முன்னோர்களின் சரீரமும் மனமும் ஆரோக்கியமாக இருந்ததற்கு மலையேற்றமும் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மலையேற்றத்தின் மூலம் குருதி சுற்றோட்டம் சீராக நடைபெற்று, இதயமும் சிறப்பாக செயல்படும். வருடத்தில் ஐந்து ஆறு முறை மலை ஏற்றம் மேற்கொண்டால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறது மருத்துவ உலகம். இருப்பினும் இதய நோய் உள்ளவர்கள், சுவாசக்கோளாறு உடையவர்கள், கால்மூட்டு பாதிக்கபட்டவர்கள் மலையேற்றத்தை தவிர்ப்பது முக்கியம். மலையேற்றத்திற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை எங்களோடு பயணித்த நாற்பத்தைந்து வயது யுவனும் யுவதியும் நீருபித்தார்கள்.
சூரிய உதயம்:
காலை ஆறு மணி அளவில் சூரிய உதய காட்சியை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தோம். இருபெரும் மலைகளுக்கு நடுவே நாங்கள் ஏறி வந்த மலைகளை கனமான மேகக்கூட்டம் முழுவதுமாக மறைத்திருந்தது. அந்தக் காட்சி மேகத்திட்டுக்களின் மேல் நாம் நின்றுகொண்டிருப்பது போன்ற ஓர் உண்மையான உணர்வினைக் கொடுத்தது. சற்று நேரத்தில் கண்களுக்கு கிழே, உயர்ந்த மலைகளை முத்தமிட்டுக் கொண்டிருந்த புகைமேகங்களின் இடையே சூரியனின் செவ்விரல்கள் மெல்லிய கம்பிகளாய் தன் வருகையை அறிவித்தன. பின்னர் வெண்மையான மேகமூட்டத்திலிருந்து செம்மையான சூரியன் பிதுங்கிக்கொண்டு வெளி வந்ததைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மகாகவி மில்டன் உருவகப்படுத்திய ’பூலோக சொர்கம்’ இதுதானோ என்ற பிரமையும் உண்டானது.
டாப் ஸ்டேஷனின் சிறப்பு:
சாலை வசதிகள் ஏற்படுத்தப்படாத காலத்தில், டாப்-ஸ்டேஷனிலிருந்து சென்ட்ரல்-ஸ்டேஷன் வழியாக, அடிவாரப்பகுதிக்கு (பாட்டம்-ஸ்டேஷன்) தேயிலைப் போக்குவரத்து இருந்துள்ளது. ’நீலகிரி மார்டன்’ எனப்படும் ஒருவகையான நீர்நாய் மலைப்பகுதியில் காணப்படுவதாக கூறப்படுகிறது. நீலகிரி மரப்புறா (Nilgiri wood pigeon), கேரள சிரிக்கும் குருவி (Kerala laughing thrush), ஒரு வகையான ராபின் பறவை (NIlgiri blue robin), கிரிம்சன் சன் பார்ட் (Crimson sun bird), ஈப்பிடிப்பான் பறவை (Black and orange flycatcher), கொண்டைக்குருவி போன்ற பறவை இனங்கள் மலைப் பகுதிகளில் சுற்றித்திரிபவை. இப்பகுதி காடுகள், சோலை (அ) புல்வெளிக் காடுகள் என்ற பிரிவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மலையேற்றப் பாதை மட்டுமன்றி, மூணாரிலிருந்து டாப்-ஸ்டேஷனுக்கு போக்குவரத்து வசதியும் உள்ளது.
மலை இறங்கும் பாதை:
காலை பதினோறு மணி அளவில், டாப்-ஸ்டேஷன் மலைப் பகுதியிலிருந்து வேறுப் பாதையில் இறங்கத் தொடங்கினோம். முதல் நாள் மலை ஏறிய களைப்பில், மலை இறங்குவது சற்று கடினமாக இருந்தது. சுமார் 2 மணி அளவில் ’சென்ட்ரல்-ஸ்டேஷன்’ எனப்படும் மையப்பகுதியில் மதிய உணவினை முடித்துக் கொண்டு, சிறிது நேரத்தில் உருகிய வெள்ளியாய் வழிந்துகொண்டிருந்த நீர்வீழ்ச்சியில் குளித்தோம். குளிர்ச்சியோடு மகிழ்ச்சியையும் நீர்வீழ்ச்சி அள்ளிக் கொடுத்தது. சுமார் 5 மணி அளவில், எங்கள் மலைப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறிய மகிழ்ச்சியில் குழுப் புகைப்படத்துடன் விடைபெற்றோம், புதிய நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியில்!
Leave a Reply