பாலைவனப் பயணம் (Desert safari)

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

துபாய் என்றவுடனே சட்டென்று நினைவுக்கு வருவது வானுயுர்ந்த கட்டிடங்களும் நிசப்தமான பாலைவனமும் தான். சித்த மருத்துவ கருத்தரங்கிற்காக துபாய் சென்றிருந்த மருத்துவர் குழுவாகிய நாங்கள், ஓய்வு நேரத்தில் அங்கிருக்கும் பாலைவனத்தை ரசிக்க முடிவு செய்தோம். பாலைவனப் பயணம் (Desert safari) மேற்கொள்ள நிறைய வாகன வசதிகள் அங்கு இருக்கின்றன. துபாய் நேரப்படி மாலை மூன்று மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. துபாயிலிருந்து ஒருமணி நேரப் பயணம் மூலமாக பாலைவனத்தின் மையப்பகுதியை அடைந்தோம். பரந்துவிரிந்திருந்த பாலைவனத்தை சிறிது நேரம் மெய்மறந்து ரசித்தோம்.

மிகப்பெரிய மணற் கடல்:

எங்கள் கண்களுக்கு மிகப்பெரிய கடலாக பாலைத் திணை தெரிந்தது. ஆனால் தண்ணீருக்கு பதிலாக மணல் இடம்பிடித்திருந்தது. மணற் கடலாக காட்சி அளித்த அரபு நாட்டு பாலைவனத்தின் அழகை விவரிக்க வார்த்தைகள் போதாது. நீர்க்கடலின் அக்கரையில், horizon மாயத் தோற்றம் உண்டாக்குவதைப் போல, மணற்கடலின் அக்கரையிலும் horizon, மாயையை உண்டாக்கியது. அக்கரை நோக்கி மணற்பாதையில் நடைப்பயணம் செல்ல தூண்டியது. நீர்க்கடலில் அலைகள் உயிரோடு இருப்பதைப் போல, அந்த பாலைவனத்திலும் மணல் அலைகள் திடமாக இயற்கையால் வரையப்பட்டிருந்தன. அதில் ‘Desert safari’… புதுமையான திகில் அனுபவத்திற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். பாலைவனப் பயணத்திற்கே உரித்தான, அதிகளவில் குதிரைசக்தி உடைய சொகுசுவாகனம், எங்களை பிரமிக்க வைக்க அடைக்கலம் கொடுத்தது. கூடவே ஐந்து வாகனங்கள், எங்களுக்கு போட்டியாக அணிவகுத்திருந்தது.

அதிவேக பாலைவனப் பயணம் (Desert safari):

தொடங்கியது அதிவேக பயணம். மணல் தெறித்து, புழுதிப் படலம் உருவானது. வாகனத்தை மணல் சூழ்ந்தது. அருகிலிருந்த மற்ற வாகனங்கள் பார்வையில் படாத அளவிற்கு பாலைமணல் கொதித்தெழுந்தது. இருப்பினும் வாகனம் விரைந்து முன்னேறியது. எங்கள் கூச்சல்களை வாகன டையர்களின் சத்தம் வெளியில் கேட்காமல் செய்திருக்கும். எங்கள் அசைவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘Seat belt’ உடலில் ஆங்காங்கே இடம்மாறிக்கொண்டே இருந்தது. பாலைவனத்தில் ஒரு மேட்டுப் பகுதிக்கு வாகனம் மூச்சிரைக்காமல் ஏறியது. வாகனத்திற்கு முன்னே மிகப்பெரிய மணற்பள்ளம்… வேறு வழியில் வாகனம் திரும்பிவிடும் என்ற எங்கள் எண்ணத்திற்கு மாறாக, அப்படியே பள்ளத்தில் நெட்டுக்குத்தாக சீறியது எங்களை உள்ளடக்கிய வாகனம். அங்கிருந்த அழகான ஒற்றை மரத்தில் மோதி விடுவோம் என்று நினைத்து முடிப்பதற்குள், திசை திரும்பி, மணலைக் கிழித்துக்கொண்டு அடுத்த மேட்டுப்பகுதியை நோக்கி வாகனம் ஏறத்தொடங்கிவிட்டது. 

திகிலான அனுபவம்:

இப்படியே மேட்டிலும் இறக்கத்திலும் இரக்கம் காட்டாத வேகத்தில் எங்கள் வாகனம் பேரலையென நகர்ந்தது, உள்ளே நாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு! சுவரில் பல்லிகள் விளையாடுவதைப் போல, மணற் குன்றுகளில் வாகனங்கள் தொங்கி விளையாடின! நீர்க்கடல் அலைகளின் மேடு பள்ளங்களில் கப்பல் பயணிப்பதைப் போல, பாலைவனத்தின் மணல் அமைப்புகளில் பயணித்தது வாகனம். ஆனால் படுவேகமாக என்பது தான் முக்கியம். துபாயிலேயே ’Speed limit’ இல்லாத ஒரே பகுதி அந்த பாலைவனமாகத் தான் இருக்கமுடியும். ஒரு வழியாக புகைப்படம் எடுக்க வாகனத்தை நிறுத்தும் போது, திகிலான அனுபவம் மணல் வடிவில் முட்டிப்பார்த்திருந்தது.

கற்பனையைத் தூண்டிய பாலை:

பாலைவனத்தின் நடுமையத்தில் அரைமணி நேரம் நாங்கள் இளைப்பாறினோம். அப்போது ஓரளவிற்கு இருட்டியிருந்தது. பாலைவன மணலில் சாய்ந்துக்கொண்டு வானத்தைப் பார்த்த போது, மேலே வெள்ளி நிற நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. வாகனத்தில் முகப்பு விளக்கொளியில் பாலையைப் பார்த்த போது, மணல் துகள்கள், தங்க நிறத்தில் ஜொலித்தன. எனது கற்பனையில் வெள்ளியும், தங்கமும் சூழ்ந்த விலையுர்ந்த பகுதியில் தான் நாங்கள் இயற்கையோடு அளவளாவினோம்.  

அவ்வப்போது நீர்ச்சாரல் போல, மணற்சாரல் காற்றின் வலிமைக்கேற்ப எங்கள் தேகத்தை தீண்டி, அரபு தேசத்தின் வாசனையை சுட்டிக்காட்டியது. புகைப்படங்கள் கிளிக்கப்பட்டன. பாலை நிலம் என்னுள்ளே நிறைய கற்பனையை ஓடவிட்டது. ’இப்போது பெருமழைப் பொழிந்தால், அனைத்து நீரையும் மணல் எவ்வளவு தூரம் உறிஞ்சி அடியில் கடத்தும்! பெருவெட்டாக மின்னல் உதிர்ந்தால் முன்னே இருக்கும் அந்த ஒற்றை மரத்தை தாக்கி கருக்குமா! இல்லை இருப்பது ஒற்றை மரம் தானே, ரசனைக்காக அப்படியே விட்டுவிடுமா! மணற்பள்ளங்களில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீரில் (Oasis), உயிர்ச்சூழல் எப்படியிருக்கும்’ எனப் பல கற்பனைகள் தோன்றின. மணல் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அந்த மிகப்பெரிய மணல் பிரதேசத்தில் துளிர்விட்டது. ஆனால் எனக்கு முன்பாகவே இயற்கை, அந்த பாலைவனத்தில் நிறைய மணற் வீடுகளை, குன்றுகளின் அளவிற்கு கட்டி முடித்திருந்தது. 

பாரம்பரியப் பயணம்:

அடுத்ததாக பாரம்பரிய உணவுகளை ருசிப்பதற்காகவும், பாரம்பரிய நடனத்தையும் ரசிப்பதற்காகவும், இருபுறமும் பாலைவனம் சூழ்ந்த தார்ச்சாலையில் சறுக்கியது வாகனம். இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, மணல் சூழ்ந்த வெட்டவெளியில் உருவாக்கப்பட்டிருந்த சிறுகிராம அமைப்பிற்கு எங்களை வாகனம் கொண்டு சேர்த்தது. அங்கு அரேபிய இசை ஒலித்துக்கொண்டே இருந்தது. வெவ்வேறு வகையான உணவுகளை ருசித்தோம். நெருப்பு நடனம், மிருக நடனம் என பாரம்பரிய நடன வகைகளையும் அங்கு பார்க்க முடிந்தது. 

பழக்கிவைக்கப்பட்ட ‘Falcon’ எனும் இரைகொல்லிப் பறவையுடன் புகைப்படம் எடுப்பதற்காக நிறைய கூட்டம் அலைமோதியது. அரபு உடையில் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக ஒரு அரங்கம், ஒட்டக அணிவகுப்பு, அரபிய பொருட்களின் விற்பனையென அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது. 

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்:

அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர் துபாயின் மையம் நோக்கி வாகனம் புறப்பட்டது. பாலை மணல் பகுதி மெள்ள மெள்ள மறைந்து, பாலையில் முளைத்த கம்பீர கட்டிடங்கள் நிறைந்த துபாய் பகுதிக்குள் சுமார் ஒன்பது மணி அளவில் வாகனம் சென்றடைந்தது. வித்தியாசமான பயண அனுபவத்தைக் கொடுத்த வாகனத்தின் ஓட்டுனர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் கைக்குலுக்கி, அனுபவத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்!… ’பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்ற பாலைத் திணையின் உரிப்பொருள் இலக்கணத்தைப், பாலைவனத்தைப் பிரிந்த போது நன்றாக உணர்ந்தோம். காதலன் காதலியை பிரியும் போது உண்டாகும் பிரிவின் துயரத்தை, பாலை எனும் காதலியின் பிரிவின் துயர் உணர்த்தியது.

இந்த ஆறுமணி நேர பாலைவனப் பயணத்திற்கு, இந்திய ரூபாயின் மதிப்பில் 1800 முதல் 2000 வரை வசூலிக்கிறார்கள் (100-180 AED). குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் போல, பாலையும் இயற்கையின் அதிசயம் தானே!… மற்ற நான்கு திணைகளுக்கும் நிகராக பாலையிலும் இயற்கையின் கவிதைகள் உண்டு. பாலைவனப் பயணம் முடிந்ததும் எப்போதும் போல, இயற்கை வாரி வழங்கிய உற்சாகத்திற்கு குறைவேயில்லை!… 

Subscribe to Our Youtube Channel