பறவைகள் மற்றும் காடுகள் மீது ஆர்வமுடைய நாற்பது பேர் கொண்ட குழுவாகிய நாங்கள் சனிக்கிழமை காலை ஏழு மணி அளவில் கேரள மாநிலம் தட்டக்காடு சலீம் அலி பறவைகள் சரணாலயத்திற்கு முன் ஒன்று கூடினோம். பசுமை மாறாக் காடுகள் கண்களுக்கு இதமளித்தன. தென்மேற்கு பருவமழை வாஞ்சையோடு பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது. ஆரம்பமே அமர்க்களமாக உயர்ந்திருந்த பலாமரக் கூட்டங்களின் உச்சிகளில் இருவாச்சி பறவைகள் (Malabar Grey Hornbill) வந்தமர்ந்து காட்சியளித்தன. நீளவால் கரிச்சான் (Rocket tailed Drongo) விருட்டென்று அங்கிருந்த ஓடையின் மீது பறந்து எங்களை தலை நிமிரச் செய்தது. எங்களுக்கு வழிகாட்டியாக காட்டுயிர் ஆர்வலர் திரு.சுதீஷ் இணைந்து கொண்டார்.
சேற்றில் மீன் பிடிக்கும் பயிற்சி:
சலீம் அலி பறவைகள் சரணாலயத்திற்குள் இளைப்பாறிவிட்டு, பதினொறு மணி அளவில் ஆழம் குறைந்த ஆற்றில் அனைவரும் இறங்கினோம். சேற்றில் சிக்கிய மீன்களை பிடிக்கும் கலையை அங்கிருந்த பாரம்பரியமாக மீன் பிடிக்கும் குழுவினரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு பல வகையான மீன்களை பிடித்தோம். அவ்வப்போது பெரிய மீன்கொத்திகளும், சிறிய வெண்மார்பு மீன்கொத்திகளும் எங்களுக்கு போட்டியாக வெளிவரும் மீன்களை கொத்திப் பிடித்து தங்கள் பெயரின் இலக்கணத்தை நிரூபித்தன. சாரலில் நனைந்த நீர்க்காகங்கள் இறக்கைகளை விரித்து உலர வைத்துக்கொண்டிருந்தன. ஆர்வமுடன் ஆற்றில் இறங்கிய எங்கள் உடல் முழுவதும் சேற்றின் சாயம். சேற்றின் கறைகளை அப்போது பெய்த பெருமழை ஓரளவிற்கு துடைத்தது.
சலீம் அலி பறவைகள் சரணாலயம்:
மதியம் மூன்று மணி அளவில் திரு.சுதீஷ் அவர்கள் பறவைகள் சரணாலயத்திற்குள் எங்களை அழைத்து சென்று பறவைகள் பற்றி நிறைய குறிப்புகளை வழங்கினார். அடைமழை விடாமல் பெய்தது. மழையில் நனைந்த படியே ஒரு மணி நேரம் மரங்கள் அடர்ந்த சரணாலயத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்தோம். மழை ஓய்ந்த பிறகு, பறவைகள் தலை காட்டத் தொடங்கின. வெவ்வேறு திசைகளிலிருந்து பறவைகளின் ஒலிகள் ஆர்ப்பரித்தன. இருபத்தைந்து வகையான இனங்களை போல ஒப்புப்போலி ஒலிகளை (Mimicry) எழுப்பும் நீளவால் கரிச்சானின் திறமையை வழிகாட்டி எடுத்துரைத்ததும் வியந்து போனோம். மரங்கொத்தி பறவை ஒன்று ஈரமான மரத்தினை கொத்திக்கொண்டிருந்தது. நிறைய ’கொண்டு கரிச்சான்கள்’ கிளைகளிலும், மின் கம்பிகளிலும் வந்தமர்ந்து சீழ்க்கை ஒலிகளை எழுப்பின. மாங்குயில், ஆரஞ்சு மின்சிட்டு, செம்மீசைச் சின்னான், பாம்புப்பருந்து என பல பறவைகளை கண்டு மகிழ்ந்தோம். பின் மழையில் நனைந்தபடி ஆற்றங்கரையில் மண் விளையாட்டுகளில் ஈடுபட்டோம்.
ராஜ நாகத்தை தேடிய அந்த இரவு…
இரவு ஒன்பது மணி அளவில் அடர்ந்த காட்டிற்குள் இரவுப் பயணத்திற்கு அனைவரும் தயாரானோம். வழிகாட்டி திரு.சுதீஷ் எங்கள் முன் மலையாள வாசம் கலந்த தமிழில் திகில் உரை நிகழ்த்தினார். ’இப்போ நாம போகப்போர தட்டக்காடு சவுத் இந்தியாலயே (தென்னிந்தியாவிலேயே) கிங் கோப்ராஸ் (ராஜநாகங்கள்) இரண்டாவதா அதிகமா இருக்குற இடம். வெரி பாய்ஸனஸ் (அதிக விஷத்தன்மை கொண்டது). அப்றம் சில பாம்புகள், சான்ஸ் இருந்தா சில விலங்குகளும் வரலாம். ரொம்ப அமைதியா இருக்கணும். யாரும் தனியா போகாதீங்க… குரூப்பா என் பின்னே வாங்க. இல்லனா ஆபத்து அதிகம்… வர விருப்பமில்லனா ரூமுக்கு இப்போவே ரிடர்ன் ஆகிடுங்க’ இது வழிகாட்டி நிகழ்த்திய உரை…
அனைவரது முகத்திலும் கிலி… யாருக்கும் தெரியாமல் அமைதியாக திரும்பி விடலாமா என்றும் தோன்றியது. அதற்கு முன் பல காடுகளின் இரவு அழகினை ரசித்திருக்கிறேன். ஆனால் அந்த காடுகளில் எல்லாம் ராஜநாகங்கள் இல்லையே! வழிகாட்டியின் உரையால், உடல் முழுவதும் பாம்புகள் ஆக்கிரமித்த ஓர் உணர்வு! ஆனால் நெருக்கமாய் கவ்விய இரவின் ரகசியத்தை திறந்துப் பார்க்க ஆசை. ராஜநாகத்தை தேடிப் பயணம் தொடர்ந்தது.
நிலவின் ஒளி ஊடுருவ முடியாத வகையில் சாலையை மூடியிருந்தன காட்டு மரங்கள். பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம், தவளைகளின் இனஅழைப்பு ஒலிகள், மரங்கள் வடிகட்டி அனுப்பிய மழைநீர்த் துளிகள், பசுமைமாறாக் காட்டின் வாசனை, மின்மினிப் பூச்சிகளின் ஒளிப் பயணம் என காட்டின் இரவுச் சூழல் ரசனைக்கு விருந்து. தீடீரென சுட்டிக்காட்டப்பட்ட இடத்தை டார்ச் உதவியுடன் பார்வையிட்ட போது, சிறிய தவளை ஒன்று ’குர்குர்’ என சத்தமிட்டது. அது சத்தமிடும் போது அதன் தொண்டையின் இரு பகுதிகளும் ’பலூன்’ போல விரிவடைவதைப் பார்த்தோம். அருகிலேயே மிகப்பெரிய அளவில் வலை அமைத்திருந்த Signature spider’ மற்றும் ’Widow spider’ போன்ற எட்டுக்கால் பூச்சிகள், அதன் வலை இல்லத்தின் மெல்லிய கம்பிகளை பற்றிக்கொண்டிருந்தன. ’பறக்கும் பல்லி’ எந்த மரத்திற்கு தாவலாம் என்ற எண்ணத்தில் ஒரு மரத்தண்டினைப் பிடித்துக்கொண்டு யோசனயிலிருந்தது. பச்சை நிறப் பல்லி இலையோடு இலையாக அசைவு கொடுத்தது.
பாதையை கொடிகளும் செடிகளும் ஆக்கிரமித்திருந்தன. அவை காலில் சிக்கும் போது பாம்பின் பின்னல் தானோ என்றொரு எண்ணம். செடிகளின் ஸ்பரிஸம் மென்மையாய் தீண்டிய போது, ராஜநாகத்தின் தீண்டல்களாகத் தெரிந்தன. வழிகாட்டி மரத்தின் கிளை ஒன்றை பார்க்கச் சொன்னார். ராஜநாகம் தான் என்ற எண்ணத்தில் திகில் கலந்த பார்வையுடன் மரக்கிளையை நோக்கினோம். அதிசயக்கும் வகையில் ’பக்கி’ (Great eared night jar) என்ற இரவாடிப் பறவை சலமின்றி அமர்ந்துகொண்டிருந்தது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல், கண் விழித்து கனவில் மிதந்தது பக்கி! பின்னர் வழிகாட்டியின் அறிவுறுத்தலின் பேரில் விடுதிக்கு திரும்பினோம். ஆனால் ராஜநாகத்தை கடைசி வரை பார்க்க முடியவில்லை என்பதில் வருத்தமே!
மலையேற்றம்:
மறுநாள் காலை ஏழு மணி அளவில் சரணாலயத்திலிருந்து பத்து கி.மி. தொலைவிலிருக்கும் மலையேற்றத்திற்கு அனைவரும் தயாரானோம். அப்போது மரத்திலிருந்து மனிதர்கள் ‘கெக்கபுக்க’ என சிரிப்பதை போல சிரிப்புச் சத்தம். அது இருவாச்சிப் பறவைகளின் குரல் ஒலி என்பதை எடுத்துக்கூறினார் வழிகாட்டி. வால் காக்கைகளும், சிரிக்கும் ஒலிகளை வெளிப்படுத்துவதில் ’நாங்கள் சளைத்தவர்கள் அல்ல’ என்று குரல் கொடுத்தன. மலையேற்றம் தொடங்கியது. யானை லத்தியில் முளைத்திருந்த காளான்கள் மலையின் அடிவாரத்திலேயே தென்பட்டன. மழை அதிகளவில் பெய்திருந்ததால், மலை ஏறுவது கடினமாக இருந்தது. இரண்டு மணி நேரத்தில் அந்த மலையின் உச்சியை அடைந்து அங்கிருந்து, நாங்கள் அடுத்து செல்லவிருக்கும் அருவியின் உச்சந்தலையை ரசித்தோம். சிறிது நேர களைப்பாறுதலுக்குப் பிறகு மலை இறங்கத் தொடங்கி விரைவில் அடிவாரப்பகுதிக்கு வந்தடைந்தோம்.
உருமறைத் தோற்றம்:
படைப்பின் அதிசயத்தை ஒரு பறவையின் வடிவில் அந்த மலை அடிவாரத்தில் கண்டோம். இலைச் சருகுகளையொத்த உடல். வித்தியாசமான முக அமைப்பு. நீண்ட நேரத்திற்கு அசையாதிருக்கும் தனித் திறமை. உருமறைத் தோற்றத்திற்கு (Camouflage) சிறந்த எடுத்துக்காட்டு. இவை அனைத்தும் ‘Srilankan Frog Mouth’ எனப்படும் பறவையைப் பற்றிய விளக்கம். இலங்கையிலும் மேற்கு தொடர்ச்சி மலையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இப்பறவையை காணமுடியும்.
அருவியின் அருமை:
பறவையின் நினைவுகளை சுமந்துக்கொண்டே அருவியை நோக்கி நடந்தோம். வழியில் சென்றுக்கொண்டிருந்த ஓடையின் அருகில் கவிகை சூழ் மதிய உணவு. இதுவரை பார்த்திராத வித்தியாசமான பாறை அமைப்பில் வழிந்துக்கொண்டிருந்த நீரின் வீழ்ச்சி. மழையோடு சேர்ந்து அருவியில் நனைந்தோம், பாறையில் சருக்கினோம். மலை ஏறும் பயிற்சி போல, பாறை ஏறும் பயிற்சியும் அங்கு அளிக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு நாட்கள் மழையில் நனைந்தும் யாருக்கும் உடல்நிலை பாதிக்கப்படவில்லை. இயற்கை என்றுமே நோய் உண்டாக்குவதில்லை.
ஒருமணி நேரம் கழித்து மீண்டும் சலீம் அலி பறவைகள் சரணாலயத்தை வந்தடைந்தோம். வழிகாட்டி திரு.சுதீஷ் அவர்கள் அனைவருக்கும் கலப்படமற்ற மலைத்தேனை வழங்கினார். பல வித்தியாசமான அனுபவங்களையும், காடுகளின் தனித்தன்மை பற்றியும் விளக்கம் அளித்த வழிகாட்டிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்த பசுமைமாறாக் காட்டினை விட்டு விலக மனமில்லாமல் பசுமையான நினைவுகளுடன் ஊர் திரும்பினோம்.
சிறந்த பதிவு…
thank u sir