விதையில்லா பழங்கள்

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

இப்போதிருக்கும் பழங்களை கடித்து சாப்பிடும் போது ஒரு விதை கூட பற்களுக்கிடையில் சிக்கிக்கொள்வதில்லை. என்ன காரணம்? கடினமான விதைகளையும் மாவாக நசுக்கும் அளவிற்கு நமது பற்கள் அதீத பலம் பெற்றுவிட்டனவா அல்லது பற்களுக்கிடையில் சிக்காத அளவிற்கு நமது பற்கள் நெருக்கமடைந்துவிட்டனவா! இல்லை, இப்போதைய பழங்களில் விதைகளே இருப்பதில்லை என்பதே கேள்விக்கான பதில்!

விதையில்லாத பழங்களை சாப்பிடுவோம் என நினைத்துப் பார்த்திருப்போமா! அன்றாட நிகழ்வாக விதையில்லா பழங்களையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்! கடினமான விதைகளை நீக்கிவிட்டு சாப்பிடுவதற்கு எளிமையாக பல்வேறு பழங்கள் உருமாற்றம் அடைந்துவிட்டன! அதில் தர்பூசணியும் திராட்சையும் அடங்கும். இப்படி பல எடுத்துக்காட்டுக்களை அடுக்கலாம். 

நவீன வளர்ச்சியால், விதையில்லா பழங்களை உருவாக்க முடியுமே தவிர, விதைகளுக்குள் இயற்கையாக இருக்கும் மருத்துவப் பலன்களை உருவாக்க முடியாது. குறிப்பாக விதைகளுக்கான மருத்துவப் பலன்களை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறது சித்த மருத்துவம். நவீன அறிவியல் ஆய்வுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. விதைகளின் பயன்களை அறிந்து, பழங்களை சாப்பிடும் போது, ஆசையாக விதைகளைத் தேடினால் ஒன்றிரண்டு கூட கிடைப்பதில்லை!

ஒரு காலத்தில் திராட்சையில் இருக்கும் விதைகளை துப்பிவிட்டு, சதைகளை மட்டும் சுவைத்தோம்! ஆனால் அதன் விதைக்குள்ளிருக்கும் சத்து பிரித்தெடுக்கப்பட்டு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் செய்தி பலருக்கும் தெரியாது. இப்போது விதையுள்ள திராட்சைகளப் பார்ப்பது அபூர்வம்! விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மருந்தின் வணிகம் அமோகம்!

நாட்டுப் பப்பாளிப் பழத்தை வெட்டும் போதே, அதனுள்ளிருந்து நூற்றுக்கணக்கான மிளகு போன்ற விதை முத்துக்கள் கொட்டும்! சமீப காலமாக ஹைபிரிட் பப்பாளிப் பழங்களே சந்தைகளில் அதிகம் உலா வருகின்றன. அவற்றை வெட்டி லென்ஸ் வைத்துப் பார்த்தால் கூட விதைகள் இல்லை. சுவையோ குறைவு! ஆனால் உடலுக்கு நன்மை செய்யும் பல நுண்ணூட்டங்கள் பப்பாளியில் இருக்கிறது என பாரம்பரியமும் அறிவியலும் பேசுவதால் விதையில்லா பப்பாளிகளை சாப்பிட வேண்டியுள்ளது. 

பூசணி விதை… மாதுளை விதை… தாமரை விதை என விதைகள் சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக செயல்படுகின்றன. பல்வேறு சித்த மருந்து தயாரிப்புகளில் விதைகளின் சேர்மானம் நிச்சயம் உண்டு. எ.கா.. மாதுளம் விதை, சுக்கிலத்தை இறுக்கி அதிலுள்ள குற்றத்தைப் போக்கும் என குறிப்பிடுகிறது சித்த மருத்துவம். நவீன அறிவியல் அடிப்படையில் விந்தணுவில் குற்றம் என்பதை, அதன் உருவ அமைப்பில் (Sperm morphology) ஏற்படும் பாதிப்புகளை குறிப்படலாம். இப்போதைய சூழலில் பலருக்கும் விந்தணு உருவ குறைப்பாட்டின் காரணமாக குழந்தைப்பேறு தள்ளிப்போவதை அறிந்திருப்போம்! இதைப் போலவே முருங்கை வித்து, நீர்த்த விந்து நீரைப் பிசின் போலாக்கும் என்கிறது சித்த மருத்துவம். இப்படி எண்ணற்ற பலன்கள் விதைகளுக்கு உண்டு. 

விதை உள்ள பழங்கள் மட்டுமே உடலுக்குத் தேவைப்படும் முழு ஆற்றலை வழங்குவதாக கொள்ளலாம். இயற்கை பொதுவாகவே அதன் வம்சத்தை விரிவுப்படுத்த விதைகளுக்குள் அதன் மரபு அச்சைப் பொதித்து வைத்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு நமது வசதிக்காக செயற்கையாக உருவாக்க முற்படும் போது, வியாபார ரீதியாக பலன்கள் பெருகும், ஆனால்!… 

கிராமத்து தோட்டத்தில் விளையும் கடினமான விதைகளைக் கொண்ட நாட்டுக் கொய்யாவையோ, நாட்டு மாதுளையையோ சாப்பிட நமக்கு விருப்பமிருப்பதில்லை. விதைகளுக்கான அறிகுறியே இல்லாத ரகங்களுக்குத் தானே நாம் அல்லாடுகிறோம். சிறு வயதில் பச்சைத் திராட்சைப்பழத்தை கொட்டையோடு விழுங்கிவிட்டு, வயிற்றில் இருந்து திராட்சைக் கொடி வானத்தை நோக்கி வளர்வது போல ஒரு கற்பனை அந்தக் கால குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட கற்பனைக்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை. அனைத்தும் கொட்டையில்லாத ஹைபிரிட் மயம்!

சுவைத் தத்துவம்: பழச்சதைக்கு ஒரு சுவை… அதே பழத்தில் இருக்கும் விதைகளுக்கு வேறு சுவை இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இரண்டு சுவைக்கும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் இருக்கும். ஏதாவது ஒரு காரணத்திற்காகவே சுவைத் தத்துவ அடிப்படையில் ‘பழங்களையும் விதைகளையும்’ உருவாக்கியிருக்கும் இயற்கை! இந்த சுவைக் கலவையே நமது பாரம்பரிய பொக்கிஷம்! ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வருகின்றன!… 

அதிக மகசூலில் பெறப்படும் ஹைபிரிட் பழங்கள், பிரசர்வேடிவ்களில் மிதந்து, பிரீசர்களில் தவழ்ந்து நம்மை அடைய சிலபல நாட்கள் ஆகின்றன! ஆனால் விதையுள்ள நாட்டுப் பழங்கள், நம் கண் முன்னே வளர்ந்து, எவ்வித செயற்கை தாக்கமுமின்றி நம் கைகளில் தவழும் இயற்கையின் பொக்கிஷங்கள்! ஆனால் நாம் உதாசினப்படுத்துகிறோம்!

ஒரு கற்பனைக் கதை… பறவைகளும் விலங்குகளும் சில பழங்களின் விதைகளை சாப்பிட்டு, செரிமானமடையாத கடினமான விதைகளை தங்கள் மலத்தின் மூலம் வெளியேற்றி, காட்டிலுள்ள தாவர வர்க்கத்தின் பெருக்கத்திற்கு பல்லாயிரம் வருடங்களாகவே காரணமாக இருந்து வந்தன!… ’சமீபமாக நிறைய தாவரங்கள் உருவாவதில்லையே’ என தாவர வர்க்கம், பறவைகள் மற்றும் விலங்குகளிடம் கேள்வியை முன் வைத்தது! ‘இல்லையே நாங்கள் முறையாகத்தானே சாப்பிடுகிறோம்… மலமும் இயல்பாகவே வெளியேறுகிறது!… ஏன் தாவரங்கள் பெருகவில்லை’ என்று ஒன்றிணைந்து ஆராய்ச்சி நடத்தின!… சில வருடங்களாக அவை சாப்பிட்ட பழங்களில் விதைகளே இல்லாமல் இருக்கும் உண்மை தெரிய வந்தது! அதிர்ந்தன பறவைகளும் விலங்குகலும்!… இது கற்பனைக் கதையாக இருப்பினும், பல்வேறு உண்மைகள் இதில் இருக்கின்றன! சிந்தித்துப் பாருங்கள்!

அதிக விளைச்சல் தருவதற்காக உருவாக்கப்பட்ட ஹைபிரிட் பழங்களால் அல்லது விதையில்லா பழங்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா எனும் சந்தேகம் பொதுவெளியில் உலா வருவதை அறிவோம்! சந்ததியைப் பெருக்கும் விதைக்கும், நமது சந்ததியைப் பெருக்கும் சக்திக்கும் தொடர்பு உண்டா எனும் சந்தேகம் எழுவது இயற்கையே! தற்போது வரை ’விதையில்லா பழங்களால் ஆண்மைக்கு ஆபத்து’ என்ற ரீதியில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை! 

’விதையில்லா பழங்கள்’ என சொல்வதே சற்று நெருடலாகத் தான் இருக்கிறது! ஏனெனில் பழங்கள் என்றாலே ’விதைகள் கொண்ட அமைப்பு’ என்பதே இலக்கணம்! ஆனால் நாம் தான் இயற்கையின் பல இலக்கணங்களை சிதைத்துவிட்டோமே!…

விதையுள்ள இயற்கையான பழங்களைத் தேடிப்பிடியுங்கள். கடினமான விதைகளை கடித்து சாப்பிடுங்கள், பற்களுக்கும் பலம் கிடைக்கும். எப்படி மலருக்கு நறுமணமும் வண்ணமும் இருப்பது இயற்கையின் நியதியோ, பழச்சதைக்குள் விதைகள் இருப்பதே இயற்கையின் நியதி! அப்போது விதையில்லா பழங்கள்? இது உடலில் ஏதாவது  மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அறிய பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். 

ஒரு பக்கம் தங்கள் நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட விதைகளையே நாடு முழுவதும் வியாபாரம் செய்ய திட்டமிடும் சில பன்னாட்டு நிறுவங்கள்… மறுபுறம் விதையில்லா பழங்களின் பரிமாற்றம்… இவற்றால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுமா… காலம் தான் பதில் சொல்லும்!… 

இப்போதைக்கு விதையில்லா பழங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்பு ஒன்றை அறுதியிட்டு கூறலாம்! அது என்னவெனில் விதைகளில் இருக்கும் நுண்ணூட்டப் பொருட்கள், எதிர்-ஆக்ஸிகரணிப் பொருட்களின் மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்காமல் போகும்!…  

Subscribe to Our Youtube Channel