நெல்லி

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதற்காக அதியமான் நெல்லிக்கனியை ஒளவையாருக்கு வழங்கிய வரலாறை யாரும் கேள்விப்படாமல் இருக்க முடியாது. பல்வேறு நோய்களைத் தடுக்கும் ‘தடுப்பு மருந்தாக’ நெல்லிக்கனி நெடுங்காலமாக பயன்பட்டு வருகிறது.

அறுசுவைகளில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இயற்கையின் அருட்செல்வம் நெல்லிக்கனி. ’நரை திரை மூப்பை’ தள்ளிப்போட நெல்லியைவிட சிறந்த பழம் எதுவுமில்லை என்று சொல்லலாம். 

வீக்கமுறுக்கி, சுரமகற்றி, செரிவூக்கி ஆகிய செய்கைகள் கொண்டது நெல்லி என்கின்றன ஆய்வுகள். காலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், ஃப்ளாவனாய்டுகள், வைட்டமின் – சி ஆகியவை நெல்லியின் முக்கிய மருத்துவக் கூறுகள். சிறந்த எதிர்-ஆக்ஸிகரணியாக செயல்படக்கூடிய நெல்லியின் உட்கூறுகள், புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நெல்லிக்கனியை மற்ற பழங்களுடன் சேர்த்து சாறாக குடிக்கும் போது, ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கிறதாம். 

தலைமுடி வளர்ச்சிக்கு:

தலை முடியின் ஆரோக்கியம் தொடங்கி, பாதங்கள் உறுதியோடு நிலத்தில் பதித்து வலுவாக நடப்பது வரை அனைத்தும் நல்கும். 

கருகருப்பான கூந்தலை வழங்குவதுடன், அடர்த்தியையும் அதிகரிக்கும். 

நெல்லியில் ஊறிய குடிநீர்:

நெல்லிக்கனியை தண்ணீரில் ஊற வைத்து, நீரின் மருத்துவ குணத்தை அதிகரிக்கலாம். நெல்லி ஊறிய நீருக்கு மருத்துவ குணமுள்ள மெல்லிய புளிப்பு, இனிப்பு சுவை கிடைக்கும். 

நெல்லிக்காய் கொண்டு செய்யப்படும் ’நெல்லிக்காய் இலேகியம்’, அற்புதமான நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும் மாமருந்து. சிறுவயது முதலே நெல்லிக்காய் இலேகியத்தை தினசரி சாப்பிட்டு வர, சளி, இருமல், அடிக்கடி சுரம் வருவது போன்ற பிரச்சனைகள் இருக்காது. 

நெடுநாள் இளமைக்கு:

நெல்லிக்கனிக்கு குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி மற்றும் மலமிளக்கி ஆகிய செய்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பகல் வேளைகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வர, பீனிசம், வாய் நீரூறல், வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், மலக்கட்டு போன்றவை நீங்கும் என குறிப்பிடுகிறது சித்த மருத்துவப் பாடல். இதிலிருக்கும் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவையால் கபமும் குறையும். நெல்லிக்கனியை தொடர்ந்து பயன்படுத்த கற்ப மருந்தாக செயல்பட்டு பல்வேறு நோய்களைத் தடுக்கும். இளமையான தோற்றத்தை நெடு நாட்களுக்குத் தக்க வைக்கும். 

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் சேர்ந்த சித்த மருந்தான திரிபலா சூரணம், பல்வேறு நோய்களுக்கான முக்கிய மருந்து. மலமிளக்கியாகவும், கற்ப மருந்தாகவும் நெல்லிக்காய் சேர்ந்த திரிபலா சூரணம் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

உப்பு, மிளகாய்த் தூளுடன்:

நெல்லியுடன் உப்பும் மிளகாய்த் தூளும் ஒருசேர தேய்த்து, நாவில் வைத்து சுவைக்க, உடல் முழுவதும் குதூகலத்தைப் பரவச் செய்யும். கிராமப் பிள்ளைகளுக்கு செலவே இல்லாமல் கிடைத்த வைட்டமின் – சி நெல்லிக்கனி! வைட்டமின் – சி குறைபாட்டால் ஏற்படும் ’ஸ்கர்வி’ நோய் நிலைக்கு நெல்லிக்கனி சிறந்த மருந்து.

வலுகொடுக்கும் நெல்லி ஊறுகாய்:

நெல்லிக்கனியைத் தேனில் ஊறவைத்து தயாரிக்கப்படும் ‘தேன் நெல்லி’ நலம் பயக்கும் சிற்றுண்டி. நெல்லி ஊறுகாய் செரிமானத்தைத் தூண்டி, உடலுக்கு வலுவைத் தரும் தொடு உணவு. இஞ்சி முரப்பான் போல, நெல்லி முரப்பானும் செரிமான உபாதைகளுக்கு சிறந்தது.

ஊட்ட உணவான நெல்லிச் சோறு:

கட்டுச்சாத வகைகளில் நெல்லிச்சோறும் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்த ரகம்! நெல்லிக்கனி, தேங்காய்த் துருவல், நிலக்கடலை, உளுந்து கொண்டு தயாரிக்கப்பட்ட நெல்லி சாதம், மிகச் சிறந்த ஊட்ட உணவு. நெல்லியில் சாறெடுத்து மற்ற நறுமணமூட்டிகளைக் கூட்டி ஆரோக்கியமான தனித்துவமான இரசம் வைத்து சுவைக்கலாம். நெல்லியைத் துவையல் செய்து சாப்பிட, வாந்தி, சுவையின்மை பிரச்சனைகள் விலகும். 

மென்று சாப்பிடுவதே நல்லது:

நெல்லிக்கனியை சாறாக்கிக் குடிப்பதைவிட, வாயில் நன்றாக மென்று சாப்பிட, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து செரிமானத்திற்கு சிறப்பான திறப்பு விழா நடத்தும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை நீக்க நெல்லிக்கனி உகந்தது.

செயற்கை சுவையூட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும் நெல்லிக்கனி ஜாம், ஊறுகாய், இனிப்பு முலாம் பூசப்பட்ட வற்றல் என பல ரகங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் நமக்கு அருகிலுள்ள மரத்தில் காத்திருக்கும் நெல்லியை குலுக்கி ருசித்து சாப்பிடுவதில் தான் தனி சுகம் அடங்கியிருக்கிறது.  

வெள்ளைப்படுதலுக்கு நெல்லி முள்ளி மருத்துவம்:

உலர்ந்த நெல்லிக்கனியை (நெல்லிமுள்ளி) சாப்பிட, சுவையின்மை பிரச்சனை தீரும். பித்த நோய்கள், பெரும்பாடு. வாந்தி, வெள்ளைப்படுதல், புண் போன்ற தொந்தரவுகள் நீங்கும். நீண்ட நாள் தேவைக்கு நெல்லிக்கனியை உலரச் செய்து வற்றலாகவும் உபயோகிக்கலாம். 

தினம் ஒன்று அல்லது இரண்டே போதும்:

’நெல்லிக்கனிக்கு இவ்வளவு மருத்துவப் பலன்களா!’ என்று ஆச்சர்யப்பட்டு, கூடைகூடையாக ஒரே நாளில் சாப்பிட்டு எங்கே இளமை என்று தேடாதீர்கள்! பொன் முட்டை இடும் வாத்து போல, நம் ஆரோக்கியம் காக்கும் நெல்லிக்கனியை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற விகதத்தில் சுவைத்து அதன் முழு பலன்களைப் பெறலாம்!

நெல்லிக் குடிநீர்: நெல்லி வற்றல், சுக்கு, சிற்றாமுட்டி வேர், வில்வம், நெற்பொரி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து மருத்துவக் கொதி நீராக பயன்படுத்தலாம். நீரின் மருத்துவ குணத்தை அதிகரித்து தாகம் தீர்க்கும் நல்பானமாக அமையும். 

நெல்லி முரப்பா: கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் நெல்லிக்கனிகளை இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். பின் நெல்லிக்கனிகளை நீரில் நன்றாக கழுவிய பிறகு உலர வைக்கவும். நெல்லிக்கனிகளை பனைவெல்லம், எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்த கலவையில் போட்டு மெல்லிய தீயில் சிறிது நேரம் வேக வைக்கவும். இறுதியாக ஏலக்காய் சேர்த்து நறுமணத்தோடு சுவைக்கலாம். 

நெல்லிக்காய் லட்டு: நெல்லிக்கனியோடு பனைவெல்லம் சேர்த்து பசை போல அரைத்து (ஒரு கப் அளவு) வைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவல், அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, கால் ஸ்பூன் இலவங்கப்பட்டைப் பொடி, சிறிது குங்குமப்பூ… இவற்றை மேற்சொன்ன நெல்லிப்பசையோடு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அழகிய உருண்டைகளாக உருட்டிக்கொண்டு பரிமாறலாம். 

உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல, நெல்லியின் மருத்துவப் பலன்கள் தெள்ளத் தெளிவாக வெளிப்படக்கூடியவை! பழமொழியின் உண்மைத் தன்மையை உணர்ந்து பார்க்கலாமா!

Subscribe to Our Youtube Channel