பூநாரை

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

தொலைவிலிருந்து பார்த்த போது, 200 தாமரை பூக்கள் நீரிலிருந்து நீண்டு பூநாரைகளாக மாற்றம் அடைந்துவிட்டனவோ என்று தான் தோன்றியது. பக்கத்தில் சென்று பார்த்த போது தான் அவை அழகு மிகுந்த பூநாரைகள் என்பது தெரியவந்தது!…

தமிழக-ஆந்திரம் சந்திக்கும் கடற்கரையோரம் உள்ள பழவேற்காடு ஏரியில் நீர்ப் பறவைகள் கவிபாடிய மாலை வேளை அது. மேலும் கவித்துவத்தைக் கொடுக்க, நீர்ப்பரப்பின் மீது சாரலைத் தூவ மேக கூட்டங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தன! 

பூநாரைகளைக் காண விசைப் படகில் புறப்பட்டோம். கிட்டத்தட்ட இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு ஏறக்குறைய 200 பூநாரைகள் தூரத்தில் தென்பட, மனம் பரவசமடைந்தது. பூநாரைகளில் சில, நீல வானத்திற்கு வண்ணம் தூவ ஆவலாய் பறந்துக் கொண்டிருந்தன… சில பூநாரைகள் உப்பு நீரில் தனித்தும், சில குழுவாகவும் கழுத்தை வளைத்து சேற்றில் துழாவி இரை தேடிக் கொண்டிருந்தன! 

கண்ணாமூச்சி ஆட்டம்:

ஆழம் குறைந்த பகுதி என்பதால், பறவைக் கூட்டத்திற்கு அருகில் படகை செலுத்த முடியவில்லை. வேறு திசைகளை நோக்கி திரும்பியது படகு. ஒரு பகுதியில் பூநாரைகள் நெருக்கமாக நின்று மெளன மொழி பரிமாறிக்கொண்டிருந்தன. படகின் சத்தத்தைக் கேட்டதும் மெளனத்தைக் கலைத்து எங்களுக்கு எதிர் திசையில் வேகமாக கால்களைப் பதித்து நடக்கத் தொடங்கின. இப்படியே பல முறை பூநாரைகள் காண்ணாமூச்சி காட்டன!

’படகை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டு, சத்தம் எழுப்பாமல் நீரில் நடந்து சென்றால் பூநாரைகளுக்கு வெகு அருகில் செல்லலாம்: ஆழம் குறைந்த பகுதி தான்… நானும் உங்களோடு துணைக்கு வருகிறேன்’ என்றார் படகோட்டி. அடுத்த நொடியே நீருக்குள் தன்னிச்சையாக இறங்கின எனது கால்கள். 

திரும்பிக் கிடைக்காத மாலை: 

ஓசை எழுப்பாமல் மெதுமெதுவாய் அடியெடுத்து வைத்து பூநாரைக் கூட்டத்திற்கு அருகில் சென்றோம். தண்ணீரின் சலசலப்பால் எங்கள் வருகையை அறிந்துக் கொண்ட அவை, மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கின. நானும் நடையின் வேகத்தைக் கூட்டினேன். எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகில் சென்று பூநாரைகளின் அழகினை தரிசித்தேன். 

என்னை விட மெதுவாக நடந்துக் கொண்டிருந்த பூநாரைகளுக்கு ஏதோ தோன்ற, ஒட்டு மொத்தமாக ஒரு புறம் திரும்பின! அடுத்த நொடியே கூச்சலிட்டுக் கொண்டு வானில் சிறகடிக்கத் தொடங்கின!  

கேள்விக் குறி வடிவத்தில் உடல் அமைப்பு… இளஞ்சிவப்பு  சிறகமைப்பு… சிலையென நிற்கும் கச்சிதம்… ரோஜாப் பூ நிற அலகின் முனையில் இயற்கை வரைந்த கருங்கோடு… பறந்து செல்லும் போது இறகுகளுக்கு அடியில் தெரிந்த கருவண்ணம்… இது ஓர் அற்புதப் பறவை!…

என்னை சுற்றி நான்கு திசைகளிலும் வர்ணம் பூசிய பூநாரைகள் மட்டுமே இருந்தன! இதைவிட அழகான மாலைப் பொழுது இனி எப்போதும் எனக்கு கிடைக்கப் போவதில்லை!

Subscribe to Our Youtube Channel