வேதிவால் குருவி (ஆண்): Asian paradise flycatcher – male

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
Asian paradise flycatcher, birds, birding flycatcher
Asian paradise flycatcher

சித்திரை மாதம். காய்களாய் உருமாற காத்திருந்த வேப்பம் பூக்களை ஒரு மரத்தின் கீழிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன். நீண்டிருந்த பட்டை வாலை சுமந்துக்கொண்டு திடீரென வேதிவால் குருவி ஒன்று வேப்ப மரக்கிளையில் வந்தமர்ந்தது. ஏற்கனவே பலமுறை தூரத்தில் ரசித்திருந்தாலும், இப்போது மிக அருகில்! அது அழகு நிறைந்த வேதிவால் குருவி. ஆங்கிலத்தில் Paradise flycatcher.

வெள்ளை நிறத்திலிருந்த அது ஆண் குருவி. பறவை இனத்தில் பொதுவாக ஆண்களுக்கே அழகான இறக்கைத் தொகுதிகள் இருக்கும். பெண் பறவைகளைக் கவர்ந்தாக வேண்டுமே!

படம் எடுக்க கைகள் பரபரத்தன. கேமராவை எடுத்து வர சென்றிருந்த நேர இடைவெளியில் பறவையைக் காணவில்லை. ’கண்ணுக்கெட்டியது கேமிராவிற்கு எட்டவில்லை’ என்ற ஏமாற்றத்தில் அவ்விடத்திலேயே கால் மணி நேரம் காத்திருந்தேன். 

கொடி போன்ற வால்:

என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது. மீண்டும் வந்த குருவி, அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அம்மரத்தின் வெவ்வேறு கிளைகளில் மாறி மாறி அமர்ந்தது. அதன் நீண்ட வால் வேப்பம் பூக்களைத் தீண்ட தீண்ட, பறவையின் ஸ்பரிசத்தை சுமந்துக்கொண்டு வந்த வேப்பம் பூக்கள் என் மீது சிதறி விழுந்தன. வேப்பம் பூக்கள் எவ்விடத்தில் உதிர்கிறதோ, அதற்கு மேலுள்ள கிளையில் பறவை இருக்கும் என்ற உத்தியைக் கடைப்பிடித்து பறவையை நோக்கினேன். 

வேப்ப மரத்தை ஒட்டியே இருந்தது குட்டிச் சுவர்! கேமராவை ஒரு கையில் சுமந்துக்கொண்டு, மறு கையின் உதவியுடன் சுவரில் ஏறி பறவை இருந்த கிளைக்கு வெகு அருகில் சென்றுவிட்டேன். பேரதிர்ச்சி… பறவையைக் காணவில்லை! மீண்டும் மரம் நோக்கி பறவை வரும் என்ற நம்பிக்கை இருந்தது. வேப்ப மரம் ஈர்த்ததா இல்லை என் எண்ணம் ஈர்த்ததா என்று தெரியவில்லை… எங்கிருந்தோ வேகமாக பறந்து வந்து எனக்கு மிக அருகில் அமர்ந்தது… 

அதன் கொண்டையின் அழகையும், நீண்ட வால் தந்த வியப்பையும் வெகுவாக ரசித்தேன். காற்றின் வேகத்திற்கேற்ப அதன் வால் முன்னும் பின்னும் அழகாக ஆடியது. அதன் வெண்ணிற வாலில் தென்பட்ட கருநிற கோடுகள், வாலுக்கு அழகூட்டின! பல்வேறு கோணங்களில் வாலை திருப்பிய பறவை, இறுதியாக கொடி அசைவதைப் போல வாலை அசைத்துக்கொண்டே பறந்து சென்று அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டது!… 

 

Subscribe to Our Youtube Channel