இஞ்சி

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

செரிமான உறுப்புகளோடும், சுரப்புகளோடும் நட்புப் பாராட்டி, செரிமானத் தொந்தரவுகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளும் அற்புத மருந்து இஞ்சி. ஆத்திரகம், அல்லம், ஆர்த்தரகம், இலாக்கொட்டை, நறுமருப்பு, மதில் போன்றவை இஞ்சிக்கு இருக்கும் வேறுபெயர்கள். ’காலை இஞ்சி… கடும்பகல் சுக்கு… மாலை கடுக்காய்…’ எளிமையான சூத்திரம் தான்! இப்படி காலம் அறிந்து தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் திடம்பெறும். நோய்கள் வராமல் பாதுகாக்க சித்தர்கள் வகுத்த சிறந்த கற்ப முறை இது. 

இஞ்சியை தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொஞ்சம் உலரச் செய்து, தேனில் ஊறவைத்து, தினமும் கொஞ்சம் சாப்பிட்டுவர, நரை, திரை, மூப்பு அவ்வளவு சீக்கிரமாக நெருங்காது என்கிறது சித்த மருத்துவம். இந்த ‘நரை, திரை, மூப்பு’ என்பதில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை அவிழ்ப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் இஞ்சி சார்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முடிவுகள் என்னவோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்டு ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்பட்டவை. 

ஜப்பானில் புகழ்பெற்ற பெனி-ஷோகா (Beni-shoga) எனப்படும் சிவந்த நிறமுள்ள இஞ்சி ஊறுகாயின் மீது, அந்நாட்டு மக்களுக்கு அலாதிப் பிரியம். நொதிக்க வைத்த காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் கொரிய வகை சாலட்களில் இஞ்சி முக்கியமான உறுப்பினர். இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் ‘இஞ்சி-ரொட்டிகள்’ (Ginger-bread) பிரபலம். மியான்மர் நாட்டில் மீன்கறி சாப்பிடும் போது, மீன் வாசனையைவிட, இஞ்சி வாசம் தூக்கலாக இருக்கும். அதிகளவில் இஞ்சி சேர்த்து மீன்கறி சமைக்கும் போது, மீன்வாடை குறைவதாக மியான்மர் மக்கள் கருதுகின்றனர். ஜமைக்கா நாட்டின் ‘காரமான மசாலா பொடியில்’ (Jamaica’s hot jerk spice mix) இஞ்சி சேர்க்கப்படுகிறது.

பயணங்களின் போது… கர்ப்பிணி பெண்களுக்கு… சில மருந்துகளின் பக்கவிளைவு… புற்றுநோய் மருந்துகளின் தாக்கம்… மேலும் பல்வேறு நோய்கள் காரணமாக வாந்தி வருவது போன்ற குமட்டல் உணர்வு ஏற்படலாம். காரணம் என்னவாயினும், குமட்டல் உணர்வினை நிறுத்துவதற்கு பன்னெடுங்காலமாக நமது பாரம்பரிய மருத்துவத்திலும் சீனா மற்றும் ரோமேனிய மருத்துவத்திலும் பரிந்துரைக்கப்படும் மருந்து இஞ்சி! குமட்டலைத் தடுக்க வழங்கப்படும் சில மருந்துகளால் ஏற்படும் நாவறட்சி, குழப்பம், சோர்வு போன்ற எவ்வித பக்கவிளைவுகளையும் இஞ்சி உண்டாக்காது. ‘வாஸோபிரஸின்’ எனும் ஹார்மோன் சுரப்பினைத் தற்காலிகமாக தடுத்து, பயணங்களில் உண்டாகும் குமட்டலை (Motion sickness) நிறுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் முதல் முறையாக கப்பல் பயணம் மேற்கொள்வோருக்கு, குமட்டலைத் தடுக்க அனுவமுள்ளவர்கள் பரிந்துரைத்த முதன்மை மருந்து இஞ்சி. 

இஞ்சியில் இருக்கும் ஜிஞ்ஜெரால் (Gingerol) எனும் வேதிப்பொருளுக்கு எதிர்-ஆக்ஸிகரணி, வீக்கமுறுக்கி, நுண்ணுயிர்க்கொல்லி என பல செயல்பாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் சார்ந்த ஆய்வுகளின் முடிவில், இஞ்சியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ’ஜெரும்போன்’ (Zerumbone) எனும் பொருள், புற்று செல்களின் வளர்ச்சியை தடுக்கும் மரபணுவைத் (Tumour suppressor gene) தூண்டுவதாக தெரிகிறது. அதே வேளையில் வேறு இடங்களுக்கு புற்றுநோய் செல்கள் பரவுவதையும் (Inhibits metastasis) தடுக்கிறதாம். 

இரைப்பையில் தங்கும் உணவுப்பொருட்களின் நகர்வை (Gastric emptying) விரைவுப்படுத்தி, உணவு எதுக்களித்தல், செரியா ஏப்பம் ஆகியவற்றை தடுத்து செரிமானத்திற்கு இஞ்சி துணை நிற்பதாக ஐரோப்பிய ஆய்வுக்கட்டுரை ஒன்று உறுதிப்படுத்துகிறது. இஞ்சி சார்ந்த மருந்துகள் சிந்தடிக் வலிநிவாரணி மருந்துகளைப் போல செயல்பட்டு தீராத ஒற்றைத்தலைவலியைக் (Migraine) குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. 

இஞ்சி மற்றும் சிறிது புதினா இலைகளை வெண்ணெயோடு சேர்த்து அரைத்து, உணவுகளுக்கு தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தலாம். பழத்துண்டுகளின் மீதும், பனிக்கூழ்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவி சாப்பிட, சுவை பலமடங்கு அதிகமாகும். குரற்கம்மல் இருக்கும் போது, தோல் சீவிய இஞ்சியை மென்று அதன் சாற்றைத் துப்ப, உடனடியாக பலன்கொடுக்கும். உணவை சாப்பிட்டு முடித்தவுடன், சிறிய இஞ்சித்துண்டை வாயிலிட்டு சவைக்கும் ஆரோக்கியமான பழக்கம், 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்திடமே இருந்துள்ளது.

இஞ்சிச் சாறு மற்றும் தேன் சேர்த்து பாகுபோல செய்து, ஏலம், சாதிக்காய், கிராம்பு இவற்றின் பொடி சேர்த்து நன்றாக கிளறி, அவ்வப்போது சிறுநெல்லி அளவு வாயிலிட்டு சுவைத்துச் சாப்பிட, வயிற்றுப்பொருமல், வாயுக்கோளாறுகள், வாந்தி போன்றவை சாந்தமடையும். ’இஞ்சி முரப்பா’ செரிமானக் கோளாறு, வாய்வுக்கோளாறை விரட்ட பல காலமாக பயன்பட்டு வருகிறது. 

லா-காமா (La kama) மசாலா: ஒரு ஸ்பூன் அரைத்த இஞ்சி, ஒரு ஸ்பூன் பொடித்த மிளகு, இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் இலவங்கப்பட்டை, ஒரு ஸ்பூன் ஜாதிக்காய்… இவற்றை ஒன்றாக சேர்த்தரைத்து கலந்து வைத்துக்கொள்ளலாம். மொராக்கோ நாட்டின் குழம்பு வகைகள், சூப் வகைகள், மண்பானையில் சமைக்கப்படும் ’டகைன்’ (Tagine) எனப்படும் பாரம்பரிய உணவு என அனைத்திலும் மருத்துவ குணமிக்க லா-காமா மசாலா சேர்க்கப்படுகிறது.

இஞ்சிச் சூரணம்: 500கிராம் இஞ்சியின் தோல் சீவி, சிறிது சிறிதாக நறுக்கி, காயவைத்து, நெய்யில் லேசாக பொரித்து, 250கிராம் அளவுள்ள சீரகத்தை இளவறுப்பாய் வறுத்து இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இவற்றுடன் 750 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். மூவிரல் அளவு இஞ்சி சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிட செரியாமை, வாந்தி, வயிற்று மந்தந்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

இஞ்சி மணப்பாகு: 250 கிராம் இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீரிலிட்டு நன்றாக ஊறவைத்து, பின்னர் வெல்லம் சேர்த்து சிறுதீயில் கொதிக்க வைத்து பாகுபதத்தில் இறக்கி பயன்படுத்தலாம். தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டுவர சுவையின்மை, பசியின்மை தீரும்.

கோதுமை மாவு, பால், தேன், சர்க்கரை, இஞ்சி, ஏலம், மிளகு சேர்த்து பழங்காலத்தில் தயரிக்கப்படும் இனிப்பு வகையான ‘சம்யவா’ (Samyava) பற்றி உணவு நூல்கள் பதிவிடுகின்றன. உடலுக்கு பலமூட்டும் பானகம், குடலுக்கு நன்மை தரும் மோர், நலம் பயக்கும் கரும்புச்சாறு போன்ற பானவகைகள் தொடங்கி, பெரும்பாலான நமது உணவு தயாரிப்புகளில் நுண்கூறுகள் நிறைந்த இஞ்சியை சேர்க்கச் சொன்ன உணவியல் நுட்பத்தை எண்ணும் போது வியப்பே மிஞ்சுகிறது. சைனஸைடிஸ் பிரச்சனைக்கு பயன்படுத்தப்படும் நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த மருந்தை, இஞ்சிச் சாறில் உரைத்து வெளிப்பிரயோகமாக பற்றிட விரைவாக நிவாரணம் கிடைக்கும்.  

பானைக்குள் ஈரமான மணலை நிரப்பி, அதில் இஞ்சியை புதைத்து, அவ்வப்போது ஈரம் குறையாமல் நீர்த்தெளித்து வர, சில வாரங்களில் இஞ்சி வளரத் தொடங்கிவிடும். தேவையான போது, அதிலிருந்து இஞ்சித் துண்டுகளை எடுத்து பயன்படுத்தலாம். இஞ்சியின் தோலில் நச்சுப் பொருட்கள் இருப்பதால், தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும். 

பார்வைக்கு மெல்லிய தோலுடனும் மெத்தென்றும், தொட்டுப் பார்க்கும் போது சற்று திடமாகவும் இருக்கும் இஞ்சியை வாங்குவது சிறந்தது. கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் இஞ்சிதான் நிறைய மருந்துவக்கூறுகளை உள்ளடக்கியது. அதே வேளையில் ஜமைக்கா நாட்டிலிருந்து வரும் இஞ்சியும் சளைத்ததல்ல!

இஞ்சி-டீ: இஞ்சியின் அத்தியாயம் முழுமையடைய, ‘இஞ்சி-டீ’ பற்றி பேசியே ஆக வேண்டும். அரை ஸ்பூன் ஏலம், இரண்டு மிளகு, சிறிது இலவங்கப்பட்டை, கால் ஸ்பூன் பெருஞ்சீரகம்… இவற்றை நன்றாக பொடித்து, பாலில் கலந்து லேசாக கொதிக்க வைக்கவும். கூடவே அரை ஸ்பூன் இஞ்சி மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். மற்றொரு கோப்பை கொதிக்கும் நீரில் தேயிலைகளைப் போட்டு, ஐந்து நிமிடங்களுக்கு காத்திருக்கவும். பின் நறுமணமூட்டிகள் சேர்ந்த மேற்சொன்ன பாலில், தேயிலை சேர்ந்த கொதிநீரை கலந்து கொடுப்பதே பாரம்பரியமிக்க இஞ்சி-டீ!… 

நமது ஆரோக்கியத்திற்கு உதவும் இஞ்சி எனும் ’மாமருந்திற்கு’ நாம் நன்றி சொல்கிறோமோ இல்லையோ, நன்றி மறவா நம் செரிமான உறுப்புகள், நமக்குத் தெரியாமலே நன்றி உரைத்துக் கொண்டேதான் இருக்கின்றன! இஞ்சி… பூமிக்கடியில் மறைந்திருக்கும் அற்புதம்!…

 

Subscribe to Our Youtube Channel