ஏலம்

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

நறுமணப் பொருட்களின் ராஜ்ஜியத்தில், ராஜாவாக மிளகு வீறுநடைப் போடுவதைப்போல, ராணியாக வலம் வருவது மணம் மிக்க ஏலம் (Queen of Spices). பதினைந்தாம் நூற்றாண்டில், அனைத்து நறுமணமூட்டிகளின் விலையும் உச்சத்திலிருந்தது. அப்போது மற்ற நறுமணமூட்டிகளைப் பின்னுக்குத் தள்ளி, அதிக விலைக்கு விற்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக மின்னியது ’நறுமண ராணி’ ஏலம் தான். வரைமுறையின்றி விளைந்துக் கிடக்கும் ஏலத்திற்காக, பல்வேறு நாட்டு வணிகர்கள், ’ஏல மலையைத்’ (நமது மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி) தேடி அலைந்த வரலாறு உண்டு. 

ஏலத்தின் மீது மிகுந்த மோகம் கொண்ட ரோமானியர்கள், அவற்றை அதிகளவில் இறக்குமதி செய்தனர். நமது நாட்டில் ஏலத்தை பயன்படுத்துபவர்களுக்கு நிகராக, ரோம் நாட்டு மக்களும் ஏலத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். ராஜாவான மிளகை அள்ளிச்செல்ல வந்த ஐரோப்பியர்கள், கூடவே ராணியான ஏலத்தையும் அள்ளிச்சென்றனர், 

ஏலத்தை லேசாக சிதைத்துப் போடும் போது, அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் உணவுகளில் கலந்து, தனக்கே உரிய நறுமணத்தோடு மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்தும் என்பதற்காகத் தான் ஏலத்தை தட்டிப்போடும் சமையல் நுணுக்கம் உருவானது. Cineol, Limonene, Sabinene, Terpinene என ஏறக்குறைய 25 வேதிப்பொருட்கள் ஏலத்தில் இருக்கின்றன.

வலிநிவாரணி மருந்துகளை நீண்ட நாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது உண்டாகும் வயிற்றுப் புண்களை ஏலத்தில் உள்ள ’Cineole’ குறைக்கிறது. ஏலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நறுமண எண்ணெய்க்கு மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி இருக்கிறது. ஏலம், தோல் சீவிய சுக்கு, சீரகம், ஓமம், இலவங்கம் இவற்றை வறுத்துப் பொடி செய்துக்கொண்டு, சாதப்பொடியாக செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். ஏலம் 100 கிராம், பனைவெல்லம் 200 கிராம் எடுத்துக்கொண்டு, 500மிலி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, 100மிலியாக குறுக்கி வாந்தி, மயக்கம், கை, கால் எரிச்சல் போன்றவைகளுக்கு பானமாகப் பயன்படுத்தலாம்.

திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தத்தை ஆசைத் தீர சாப்பிட்டாலும், பிரச்சனை ஏற்படாமல் நமக்கு பாதுகாப்பு அளிப்பது ஏலம் தான். நமது பாரம்பரிய இனிப்புகள் அனைத்திலும் ஏலம் மறைந்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இனிப்புச் சுவையுள்ள பொருட்களை சாப்பிடும் போது அதிகரிக்கும் கபத்தை தலைத்தூக்கவிடாமல் அமைதிப்படுத்துவதற்காகவே இனிப்புகளில் ஏலம் சேர்க்கப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் குழந்தையை பிரசவித்த தாய்க்கு, அடுத்த சில மாதங்களுக்கு, கொஞ்சம் ஏலத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய நீரைக் கொடுக்கிறார்கள். கருப்பையில் தேங்கிய அழுக்கை வெளியேற்றுவதற்காகவும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் ஏலத்தின் சத்துக்கள், குடல் பகுதிகளை கிருமிகள் தாக்காமல் பாதுகாப்பதற்காகவும் பஞ்சாப் மக்கள் கையாளும் மருத்துவ இரகசியம் இது. 

தலைபாரம், சைனஸ் தொந்தரவுகளை ஏலத்திலிருக்கும் மருத்துவகுணமுள்ள வேதிப்பொருட்கள் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருமல், தொண்டைக்கட்டு ஆகியவைகளுக்கு ஏலம் சிறந்த மருந்து. மிளகு, ஏலத்தை லேசாக வறுத்துப் பொடிசெய்து, ஐந்து சிட்டிகை அளவு நாவில் அடக்கிக்கொள்ள வறட்டு இருமல் குணமாகும். ஆஸ்துமா நோயாளர்களில், சுவாசப்பாதையை விரிவடையச் செய்து (Bronchodilatory effect), மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும். 

வாய்நாற்றத்தை தடுப்பதற்கு, ஏலவிதைகளை, புதினா இலைகளோடு சேர்த்து மென்று சாப்பிடலாம். பற்களை மையமிட்டிருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி ஏலத்தின் உட்கூறுகளுக்கு உண்டு. பற்களை தூய்மைப்படுத்துவதற்கும், வாய் நாற்றத்தை போக்குவதற்கும் பண்டைய எகிப்தியர்கள், சாப்பிட்டு முடித்தவுடன் ஏலத்தை சீவிங்-கம் போல மென்று சாப்பிடுவார்களாம். இறந்த உடல்களை பதப்படுத்த (Mummification), எகிப்தியர்கள் அதிகம் சேர்த்த நறுமணமூட்டி ஏலம்!

சித்த மருத்துவத்தில் பயன்படும் ’ஏலாதி சூரணம்’ வயிற்றுவலி முதல் தோல் நோய்கள் வரை குணப்படுத்தக் கூடிய முக்கியமான மருந்து. பதிணென் கீழ்க்கணக்கு நூல் ஒன்றிற்கு, ‘ஏலாதி’ என்று பெயரிடும் அளவிற்கு ஏலம் உயர்வாக கருதப்பட்டது. மலம் வெளியேறாமல், வயிறு உப்புசத்தோடு வலியை உண்டாக்கும் போது, ஏலாதி சூரணத்தை ½ ஸ்பூன் வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து காலையும் மாலையும் பருகலாம்.

இரத்தக்குழாய்களில் உண்டாகும் இரத்த உறைவினைத் தடுக்கும் தன்மை (Fibrinolytic activity) ஏலத்திற்கு உண்டு. புகைப்பிடிப்பதால் பாதிக்கப்பட்ட இரத்தக் குழாய்களை சீர்செய்யும் குணம் ஏலத்திற்கு இருக்கிறது. அதிகுருதியழுத்தத்தை ஏலம் கட்டுப்படுத்துவதாக ‘Journal of Ethnopharmacology’ ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. ஒழுங்கற்ற இதயதுடிப்பையும் ஏலம் முறைப்படுத்துவதாக ஆய்வுமுடிவு சொல்கிறது. அதிகளவு கஃபைன் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை ஏலம் தடுக்கிறது. அமுக்கராச் சூரணத்துடன் ஏலப்பொடியை சேர்த்து பாலில் ½ ஸ்பூன் கலந்து குடித்துவர நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கும் உதவும். 

ஏல வடகம்: (பெட்டிச் செய்தி) ஏலத்தின் மேல் தோலை நீக்கிவிட்டு அதற்குள்ளிருக்கும் ஏலரிசி, இலவங்கப்பட்டை, திப்பிலி, முந்திரி இவை அனைத்தையும் தலா 200 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அதிமதுரம், பேரிச்சம்பழம், நாட்டுச்சர்க்கரை தலா 100 கிராம் சேர்த்து நன்றாக இடித்து, அதன் சூடு இறங்கும் முன்பே சிறிய நெல்லிக்காய் அளவு வடகங்களாக செய்து வைத்துக்கொள்ளுங்கள். உணவோடு கலந்து இந்த வடகங்களை சாப்பிட்டு வர செரியாமை, வாந்தி, கழிச்சல் போன்றவை தலைக்காட்டாது. ஏல வடகம், நாவிற்கு இனிமையைத் தரக்கூடிய துணை உணவு. குழந்தைகளின் பசியை அதிகரிக்க, வாரத்தில் இரண்டு நாள், ஒரு ஏலவடகத்தை சாதத்தில் கலந்து கொடுக்கலாம். 

துருவிய தேங்காய் மற்றும் பச்சரிசியை தண்ணீர் மற்றும் பாலில் ஒரு மணிநேரம் ஊறவைத்து, பொடித்த ஏலத்தையும் நாட்டுச் சரக்கரையும் அதில் கலந்து நன்றாக பிசைந்து, பின்பு ஆவியில் வேகவைத்து புட்டு போல செய்து சாப்பிடுவதால் உண்டாகும் சுவை அற்புதமானது. குடகு மலைவாசிகளின் ஏலம் கலந்த இந்த ரெசிப்பிக்கு ‘பப்புட்டு’ என்று பெயர். புட்டு ரசிகப் பெருமக்கள் இனி இந்த ஏலத்தின் நறுமணம் கமழும் உணவு ரகத்தை முயற்சி செய்யுங்கள். கோதுமை மாவோடு சீனியும் பொடித்த ஏலமும் கலந்து செய்யப்படும் பரோட்டா போன்ற உணவு வகை, கர்நாடகாவின் பழமையான உணவு. இந்த ஏல பரோட்டாவை ‘Mandige’ என்று அழைக்கின்றனர். மைதாவின் ஆதிக்கத்திற்குப் பிறகு, இப்போது பல்வேறு வடிவங்களில் ‘Mandige’ தயாரிக்கப்படுகிறது.

ஏலம், அதிமதுரம், வெட்டிவேர், சந்தன சிராய்கள், நன்னாரி வேர், சீரகம் இவற்றை தண்ணீரிலிட்டு நன்றாக கொதிக்க வைத்து மண்பானையில் ஊற்றி பயன்படுத்த கோடைக்காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நாவறட்சி, கண்ணெரிச்சல் போன்றவை எட்டிப்பார்க்காது. வாழைப்பழத்தை மசித்து, ஏலத்தூளையும் பனங்கருப்பட்டியையும் சேர்த்து சுவைத்தால், அதன் ருசிக்கு மயங்காதவர்கள் இருக்கமுடியாது. அரிசியை வேகவைக்கும் நீரில், சிறிது ஏலத்தை தூவுவதால் உணவிற்கு நல்ல வாசனையைக் கொடுக்கும்.   

ஏலத்தைப் பொறுத்தவரை தரமும், நறுமணமும் குறைந்த ஏல ரகங்களை கலப்படம் செய்கின்றனர். காபிநிறத்தில் வரும் ஏலமோ, ஜாவா நாட்டு ஏலமோ, நேபாளத்தின் பெரிய ஏலமோ உண்மையான ஏலம் அல்ல. பசுமையான தோல் போர்த்திய நம் சேரநாட்டு ஏலம் தான் தரத்தில் உயர்ந்தது.

Subscribe to Our Youtube Channel