’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவாகவே பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் உண்மையில் கஞ்சி என்பது பத்திய உணவாக மட்டுமில்லாமல் உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நமது மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.
பட்டினப்பாலை கூறும் கஞ்சி:
‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுப் போலப் பரந்தொழுகி’ என்கிற பட்டினப்பாலை வரிகள், சோறு வடித்த கஞ்சியானது ஆறு போல ஓடியதாக கவிதைப் பேசுகிறது. நமது உணவுக் கலாச்சாரத்தில் பிண்ணிப் பிணைந்திருந்த கஞ்சி வகைகள் இன்றோ காணாமல் போய்விட்டன. கொதிகஞ்சி, உறைகஞ்சி, முடிச்சுக்கஞ்சி, பால்கஞ்சி, வடிகஞ்சி, ஊட்டக்கஞ்சி, சுடுகஞ்சி என பல்வேறு வகைகளில் கஞ்சி வகைகளைத் தயாரித்து பயன்பெறலாம். இப்போது இருக்கும் ‘சூப்’ வகைகளுக்கு முன்னோடியாக ‘கஞ்சி’ வகைகளைக் குறிப்பிடலாம். ’கஞ்சி’ என்றதுமே ‘உவ்வே’ என்று ஒதுக்கித் தள்ளாமல், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாக அதை போற்றுவது அறிவுடைமை.
காய்ச்சல் கஞ்சி:
காய்ச்சலால் அவதிப்படும் நேரத்தில் செரிமான பகுதிக்கு வேலைப் பளுவைத் தரக்கூடிய சீரணமாகாத உணவுகளைத் தவிர்த்துவிட்டு, மெல்லிய உணவு வகையான கஞ்சி எடுத்துக்கொள்வதே நல்லது. சுரம் காரணமாக முடங்கிக்கிடக்கும் செரிமானத்தை விரைவில் மீட்டெடுத்து, தேவைப்படும் சத்துக்களை உட்கிரகிக்க (Absorption of nutrients) உதவி புரியும். உடல் இழந்த நீர்த்துவத்தையும் ஈடு கட்ட முடியும். ’குடற்தன்னில் சீதமலாது சுரம் வராது’ என்கிறது சித்த மருத்துவம். என்ன வகையான சுரமாக இருந்தாலும், செரிமானம் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆமத்தை (சீதத்தை) விலக்கி, செரிமானத் திறனை மீண்டும் எழுச்சியுறச் செய்ய கஞ்சி உணவு பெருமளவில் துணையாக இருக்கும். சோற்றை வடித்து எடுக்கும் செழுமையான கஞ்சிக்கு ’அன்னப்பால்’ என்றும் பெயருண்டு.
நெற்பொரிக் கஞ்சி:
சுர நோயாளர்களுக்கு நெற்பொரிக் கஞ்சி மிகவும் சிறந்தது. நெல்லைப் பொரித்துவிட்டு, உமியை நீக்கிய பின் கஞ்சியாக செய்துகொள்ளலாம். வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்படும் போது தாராளமாக நெற்பொரிக் கஞ்சியைக் குடிக்கலாம். கிராமப்பகுதிகளில் நெற்பொரிக் கஞ்சி பிரபல்யமானது. காரணம் என்ன தெரியுமா? கிராமங்களில் உள்ள மக்களுக்கு, செரியாமையால் உண்டாகும் வயிற்று வலிக்கெல்லாம் உடனடியாக மருந்தகங்களுக்கு ஓடிச்சென்று மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, வயிற்றைப் புண்ணாக்கிக்கொள்ள வேண்டும் என்று தெரியாது.
பஞ்சமுட்டிக் கஞ்சி:
தென் தமிழகத்திலும், இலங்கை தமிழர்களிடமும் வழகத்தில் உள்ள பஞ்சமுட்டிக் கஞ்சி, உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடியது. மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் நோயுற்று மெலிந்தவர்களுக்கும் அற்புதமான உணவு. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறுபயறு (அ) தட்டைப் பயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒரு துணியில் வைத்து முடிந்துக்கொண்டு மண்பானையில் போட்டு, ஒரு லிட்டர் நீர் சேர்த்து, நான்கில் ஒரு பாகமாக (அதாவது 250 மிலி அளவு) வரும் வரை காய்ச்சவும். பின்னர் துணிமுடிப்பினை எடுத்துவிட்டு, கஞ்சியைப் பருகலாம். பருப்பு வகைகளும், பயறு வகைகளும் சேர்ந்திருப்பதால் புரதக் கூறுகளுக்கு பஞ்சமில்லை. சிலர் முளைகட்டிய பயறு வகைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகின்றனர். பஞ்சமுட்டிக் கஞ்சி தயாரித்த பிறகு சிறிது மிளகுத் தூள் தூவி பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்க எளிதில் சீரணமடைந்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரும். நோயாளியை சந்திக்க செல்லும் போது, விளம்பர உத்திகளின் மூலம் பிரபலமடைந்த ஊட்டச்சத்து கலவைகளை வாங்கிச் செல்வதற்கு பதிலாக பஞ்சமுட்டிக் கலவையை தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். நோயாளியின் உடல்நிலை விரைவில் சமநிலை அடையும்.
மாதவிடாயினை முறைப்படுத்த:
உளுத்தங் கஞ்சி, வெந்தயக் கஞ்சி போன்றவை காலங்காலமாக பெண்களின் உடலியிங்கியலை சீராக பயணிக்கச் செய்ய உதவியவை. பெண்கள் பூப்பெய்தும் போதும் அதன் பிறகும் வழங்கப்படும் உளுந்து, வெந்தயம் சேர்ந்த கஞ்சிகள், மாதவிடாய் நிகழ்வினை ஒழுங்குப்படுத்தியதோடு, உடலுக்கு தேவைப்படும் வலிமையையும் கொடுத்தன. ஆனால் இன்று முற்றிலும் மருவிப் போன பாரம்பரிய உணவு வழக்கம் மற்றும் முறையற்ற உணவு பழக்கம் காரணமாக மாதவிடாய் சார்ந்த நோய்கள் பெண்களை அதிகளவில் வாட்டுகின்றன. சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாஷியம், சோடியம் போன்ற தாதுக்களும், வைட்டமின்களும் உளுந்தில் அதிகளவில் உள்ளன. புரதங்களும் நார்ச்சத்தும் உளுந்தில் தேவையான அளவு இருக்கின்றன. மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளை நிவர்த்தி செய்யும் கூறுகள் வெந்தயத்தில் உண்டு.
சுக்கு முடிச்சுக் கஞ்சி:
சுக்கின் மேல் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு துணியில் முடிந்து, பச்சரிசியைக் கொண்டு செய்யப்பட்ட கஞ்சியில் போட்டு நன்றாக காய்ச்சி, உண்டாகும் தெளிநீரை உபயோகிக்கலாம். இதனால் உணவில் விருப்பம் உண்டாகும். வயிற்றில் உண்டாகும் மந்தம், மலக்கட்டு முதலியவை நீங்கும். சுரத்திற்கும் கொடுக்கலாம். பச்சரிசி கஞ்சி செய்யும் போதே சுக்கை துணியில் முடிந்து (முடிச்சுக் கஞ்சியாகவும்) காய்ச்சியும் பயன்படுத்தலாம். பசியைத் தூண்டும் செய்கையும் வாயுவை அகற்றும் செய்கையும் சுக்கிற்கு உண்டு.
கொள்ளுக் கஞ்சி:
சரியாக பசியெடுக்காமல் இருப்பவர்களுக்கு கொள்ளுக் கஞ்சி நல்ல பரிந்துரை. அரிசியோடு கொள்ளு சேர்த்து செய்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வர மிகுந்த வலிமை உண்டாகும். வலிமையின் அளவினை உணர்த்த, ’எள்ளைக் கையினால் கசக்கிப் பிழியும் அளவிற்கு உடலில் பலம் உண்டாகும்’ என்று உவமை கூறுகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. கொள்ளுக் கஞ்சியை ‘காணக் கஞ்சி என்றும் குறிப்பிடலாம். கொள்ளைத் தொலி புடைத்து, சிறிது மிளகும், மல்லியும் சேர்த்து செய்யப்படும் கஞ்சி வகையும் இருக்கின்றன. கப நோயளார்களுக்கு முக்கியமான மருந்தாக பயன்படுகிறது. பருவ நிலைக்கு ஏற்ப உணவு தயாரிப்புகளை முன்னெடுத்த முன்னோர்கள், கார்காலத்திலும், குளிர்காலத்திலும் அதிகமாக பருந்துரைத்தது காணக் கஞ்சியே!…
புனற்பாகம்:
இருமுறை வடித்த கஞ்சி புனற்பாகம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அவித்த சோற்றில் மீண்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பயன்படுத்துவது. வெப்ப மாற்றங்களையும் நீரியல் நுணுக்கங்களையும் பற்றி அறிந்திருந்த முன்னோர்களின் அறிவியலுக்குச் சான்றாக இந்த கஞ்சி வகையை குறிப்பிடலாம். தண்ணீரில் நிகழும் மாற்றங்களை முன்வைத்து, வெப்ப நோய்கள் நீங்குவதோடு உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் ஊட்டக் கஞ்சியாகவும் புனற்பாகம் பயன்படுகிறது.
வேனிற் காலங்களில்:
பாலாடைப் போல கட்டிய உறைக்கஞ்சி, சாதம் வேகும் போது கிடைக்கும் கொதிகஞ்சி, வடிகஞ்சி என அனைத்திற்கும் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. வேனிற் காலத்தில் மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களோடு கஞ்சி வகைகளையும் அவ்வப்போது குடிப்பது உடலுக்கு நல்லது.
சிறுதானியக் கஞ்சிகள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி தவிர சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்கள் கொண்டு செய்யப்படும் கஞ்சி வகைகளும் அதிகளவில் வழக்கத்தில் இருந்தன. அவற்றை மீண்டும் மனமுவந்து ஏற்றுக்கொள்வதன் மூலம், சிறுதானியங்களால் கிடைக்கும் எண்ணற்ற பயன்களை பெற முடியும்.
துணை மருந்தாகும் கஞ்சி:
பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யும் போது, குறிப்பிட்ட மருந்துகளோடு பத்தியமாக அரிசிக் கஞ்சியை மட்டுமே பயன்படுத்துவதாக மலைவாழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள். பல மருந்துகளுக்கு துணை மருந்தாகவும் கஞ்சி வகைகள் பயன்படுகின்றன.
மருந்தாக, துணை மருந்தாக, சிறுபொழுதிற்கான உணவாக, இடை உணவாக, ஊட்ட உணவாக, பத்திய உணவாக என பல்வேறு வகைகளில் நெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்தன கஞ்சி வகைகள். தேநீர், குழம்பி, குளிர்பானங்கள் ஆகியவற்றின் வருகைக்குப் பின்னர் மெள்ள மெள்ள வழக்கொழிந்துப் போய்விட்டன. ’கஞ்சி காய்ச்சி குடிப்போம்’ என்பது அவமானம் அல்ல பெருமை! பாரம்பரிய பெருமை!
கஞ்சி வகைகள் மற்றும் பயன்கள் மிகவும் சிறப்பு
.. மருத்துவருக்கு நன்றி…
thank u sir…